பாடல் 1052 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
திலங்
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
மனக பாட பாடீர தனத ராத ராரூப மதன ராச ராசீப ...... சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே அநக வாம னாகார முநிவ ராக மால்தேட அரிய தாதை தானேவ ...... மதுரேசன் அரிய சார தாபீட மதனி லேறி யீடேற அகில நாலு மாராயு ...... மிளையோனே கனக பாவ னாகார பவள கோம ளாகார கலப சாம ளாகார ...... மயிலேறுங் கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும், சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும், இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும், வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும், நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும், உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும், உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும் நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா? பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அருமையான ஸரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில்* ஏறி, நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே, பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே, தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே, அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே.
* மதுரையில் ஸரஸ்வதிதேவியின் 48 எழுத்துக்களின் அம்சஙகள் 48 புலவர்களாகத் தோன்றி, பாண்டியனின் ஆதரவோடு தமிழ்ச் சங்கம் அமைத்தனர். மதுரை சோமசுந்தரக்கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப்பலகை தந்தருளினார். முருகன் இந்தச் சாரதாபீடத்தில் ருத்ரசன்மன் என்ற புலவராக அமர்ந்து மற்ற புலவர்களிடையே ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைத்தார் - திருவிளையாடற் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1052 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - னாகார, னேனை, தானான, பெருமாளே, ளாகார, அரிய, வேனை, தகிட