பாடல் 104 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன ...... தனதான |
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே. |
பரந்த வினை வசத்துக்கு* உட்பட்ட ஆறு சமயத்தவரோடும்** அஞ்சாது தடுத்து வாதம் செய்யும் அறிவு இல்லாதவனும், பரந்த மார்பை உடைய, அழகிய அகில் மணமுள்ள, கஸ்தூரி இவை உள்ள ஒப்பற்ற படுக்கையில் தாம் கையில் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி அன்பு காட்டும் வேசியருடைய நட்பிலே தடுமாறும் ஓர் அறிவை உடைய (புழுப்போன்ற) நான். பகல், இரவு எப்போதும் பணி செய்து, (பற்றுக்களை) முழுதும் விட்டவர் அடையும் பரம சொரூபமாயும், ஜோதி வடிவமாயும், சிவ மயமாயுமுள்ள உனது பழனித் தலத்துக்குப் போய், பிறவி என்கின்ற வினை நீங்க, தேன் துளிர்க்கின்ற வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பி உள்ள நல்ல திருவடிகளைப் பற்றும் நாள் எனக்குக் கிடைக்குமா? சீகாழி என்னும் தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரணம் அடைந்த மதுரைக் கூன் பாண்டிய அரசனுடைய வெப்புநோய் தணியவும், விளங்கும் திருநீற்றால் கோரைப் புல்லாகிய பாய்களை உடுத்திய சமணர்களை வென்று, அவர்கள் கழுவில் ஏறவும், வாதம் செய்து வெற்றி பெற்ற ஆற்றல் உடையவனே (திருஞான சம்பந்தனே), வஞ்சனை உடைய, குதிரை முகம் கொண்ட பெண் பூதத்தின் வசத்தே நடுவில் அகப்பட்ட புலவர்களில் ஒருவராகிய நக்கீரருக்கு*** உதவி புரிந்த வேந்தனே, மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே, வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள், இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை (ஞான சம்பந்தராகத் தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே.
* வினைகள்: மூன்று வகையான ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்பனவும், இரண்டு வகையான நல்வினை, தீவினை என்பனவும் ஆகும்.
** சட் சமயங்கள்:உட் சமயங்கள் (6): வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம்.புறச் சமயங்கள் (6): உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்.
*** குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 104 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சமயங்கள், உடைய, தத்தன, தத்தா, தனதன, வெற்றி, குதிரை, என்பனவும், குகையில், என்னும், வகையான, பெண், உள்ள, பெருமாளே, முப்பால், பரந்த, வினை, பெற்ற, வாதம், செய்து