பாடல் 1037 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பெஹாக்
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை ...... யணுகாதே மாயம் பொதிதரு காயந் தனின்மிசை வாழுங் கருவழி ...... மருவாதே ஓதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி ...... லுழலாதே ஓதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலிணை ...... பெறுவேனோ கீதம் புகழிசை நாதங் கனிவொடு வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் கேடின் பெருவலி மாளும் படியவ ரோடுங் கெழுமுத ...... லுடையோனே வேதந் தொழுதிரு மாலும் பிரமனு மேவும் பதமுடை ...... விறல்வீரா மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
வாத சம்பந்தமான நோய்கள், தலைவலி, சூலை நோய், மகோதரம் என்ற வயிற்றில் நீர் தேக்கம், ஆகிய நோய்களாகிய இவை ஒன்றும் என்னை அணுகாமலும், மாயை நிரம்பி உள்ள உடல் கொண்டு வாழும்படி கருவின் வழியில் மீண்டும் என்னைச் சேர்க்காமலும், வெள்ளமாய் நிறைந்து நிற்கும் கடலில் மேலும் மேலும் வீசுகின்ற அலைகள் போல் பல பிறப்புக்களில் நான் அலைச்சல் உறாமல், உன் திருப்புகழை ஓதும் பல அடியார்களும் நற்கதி அடையவும், நான் உனது இரண்டு திருவடிகளையும் பெறுவேனோ? இசை இன்பமும், உன் புகழைச் சொல்லும் ஓசை இன்பமும், பக்தியோடு வேத வாக்கியங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடைய கேட்டினை விளைவிக்கும் ஊழ்வினையின் திண்மை அவர்களைப் பீடிக்காது ஒழியும்படி அவர்களோடு எப்போதும் பொருந்தி உடனிருந்து காக்கும் திருவருளை உடையவனே, வேதங்கள் தொழுகின்ற திருமாலும், பிரமனும் விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரனே, மேலெழுந்து வந்து போர் செய்த சூரன் பொடியாகும்படி, வேலாயுதத்தைக் கொண்டு சண்டை செய்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1037 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானந், தனதன, நான், மேலும், இன்பமும், செய்த, கொண்டு, சூரன், தலைவலி, ஓதும், பெறுவேனோ, பெருமாளே