பாடல் 1036 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
தீயும் பவனமு நீருந் தரணியும் வானுஞ் செறிதரு ...... பசுபாசத் தேகந் தனைநிலை யேயொன் றிருவினை தீருந் திறல்வினை ...... யறியாதே ஓயும் படியறு நூறும் பதினுறழ் நூறும் பதினிரு ...... பதுநூறும் ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல யோகம் புரிவது ...... கிடையாதோ வேயுங் கணியும்வி ளாவும் படுபுன மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா மீனம் படுகட லேழுந் தழல்பட வேதங் கதறிய ...... வொருநாலு வாயுங் குலகிரி பாலுந் தளைபட மாகந் தரமதில் ...... மறைசூரன் மார்புந் துணையுறு தோளுந் துணிபட வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
தீ, காற்று, நீர், மண், விண் ஆகிய இந்த ஐந்து பூதங்களும் நிறைந்துள்ள ஜீவாத்மாவும் கட்டுக்கள் ஆகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான இவ்வுடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைக்கத் தெரியாமல், (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும் முடியும்படியான திறமை வாய்ந்த செயல் எதையும் அறிந்து கொள்ளாமல், பிறப்பு ஓயும்படியாக, அறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10 மடங்கு 2,000 = 20,000) மொத்தம் (600 + 1,000 + 20,000) 21,600 மூச்சுகள்* (ஒவ்வொரு நாளும்) ஓடுகின்ற இந்தச் சிற்றுயிர் விடுதலை அடையும்படி (அதாவது இனி பிறவி ஏற்படாதபடி), நல்ல சிவ யோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ? மூங்கிலும், வேங்கை மரமும், விளா மரமும் இருக்கின்ற வள்ளிமலைச் சார்பான தினைக்கொல்லையில் வாழும் சிறுமியாகிய வள்ளியின் கணவனே, மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும், வேதங்களை வாய் விட்டு உரைக்கும் ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும் மாய மலையான கிரெளஞ்சத்தால் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும், பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரனுடைய மார்பும், இரண்டு தோள்களும் அறுந்து விழவும், வாளாயுதம் கொண்டு சண்டை செய்த பெருமாளே.
* நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசங்கள். ஒரு நாளில் உள்ள 60 நாழிக்கு (24 மணி நேரத்துக்கு), 21,600 சுவாசங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1036 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நூறும், ஆகிய, தானந், தனதன, செய்த, சுவாசங்கள், மரமும், இரண்டு, பெருமாளே, பதின், மடங்கு