பாடல் 1034 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சுருட்டி
தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை - 20
நடை- தகதகிட
தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை - 20
நடை- தகதகிட
தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த ...... தனதான |
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு வேதித்த சூலத்த ...... னணுகாமுன் கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய் ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட தோதக்கண் மானுக்கு ...... மணவாளா தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே. |
தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில் தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில் (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் செலுத்துதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே, குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும் ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1034 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்த, பக்தி, போன்றதும், உனது, நான், வாழ்வித்த, பெருமாளே