பாடல் 1033 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த தானத்த ...... தனதான |
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள் சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம் ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க ஓசைக்கு நேசித்து ...... உழலாதே ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி யோதற்கு நீசற்று ...... முணர்வாயே வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின் மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க வேதத்தி லேநிற்கு ...... மயனாருந் தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே. |
தோடு அணிந்துள்ள காது வரை நீண்டுள்ளதும், போர் செய்வதற்குச் சித்தமாய் உள்ளதுமான மை தீட்டிய கண்ணாலும், சிறந்த நெற்றியாலும், மலை போன்ற தோள்களாலும், (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனுடைய பாணங்களாலும், மேலான குணங்களை உடைய மக்களும் மனம் சோர்ந்து போகும்படி காம ஆசையை விற்கின்ற விலைமாதர்களின், ஊடல் பிணக்கில் சிக்கி வாட்டமுற, சண்டைக் கோபத்தால் மிக்கெழுந்த கூச்சல் சப்தத்தை விரும்பி (நான்) அலையாமல், எனது ஊர், ஈன்றெடுத்த தாய், எனது உறவினர் இவை எல்லாமாய் உள்ள (உனது) திருவடியைக் கெட்டியாகப் பிடித்து, போற்றித் துதிக்க நீ சிறிது எனக்கு உணர்த்த மாட்டாயோ? வேடர்களையும் பெரிய சொர்க்கப் பூமியில் வாழ்விக்க விரும்பி சிறந்த வள்ளி மலையின் மேல் இருந்த பெண்ணாகிய வள்ளிக்கு ஒப்பற்ற மணவாளனே, யானையாகிய கஜேந்திரனை அதற்குற்ற ஆபத்திலிருந்து விடுவித்த திருமாலும், அவருடன் வேதத்தையே ஓதி நிற்கும் பிரமனும், (முடியையும் அடியையும்) தேடுதற்கு முடியாத எல்லையில் நிற்கும் அழல் உருவம் கொண்ட வேடத்தினராகிய சிவபெருமான் தாம் வைத்துள்ள சேமிப்புப் பொருளாகிய ஐந்தெழுத்து நாமத்தின் (நமசிவாய) பெயரையும், புகழையும் (சம்பந்தராக வந்து) எடுத்து மொழிந்தவனே, குற்றம் இல்லாத நீதி நெறியில் பொருந்திய பக்தி சிறந்த அடியார்கள் போற்றி வணங்க, அவர்களை வாழ்வித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1033 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத்த, சிறந்த, எனது, நிற்கும், விரும்பி, பெருமாளே, வாழ்விக்க, வாழ்வித்த