பாடல் 1025 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பீம்பளாஸ்
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி ...... யுடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க தீதுவிளை விக்க ...... வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ...... ளழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து ...... வரவேணும் மாதர்மய லுற்று வாடவடி வுற்று மாமயிலில் நித்தம் ...... வருவோனே மாலுமய னொப்பி லாதபடி பற்றி மாலுழலு மற்ற ...... மறையோர்முன் வேதமொழி வித்தை யோதியறி வித்த நாதவிறல் மிக்க ...... இகல்வேலா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
சீதபேதி, காய்ச்சல், வாதம், மிகுந்துவரும் பித்தம் என்ற நோய்களெல்லாம் சூழ்ந்துள்ள இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி, மிகுந்த வலி ஏற்படும் சமயத்தில், என் தந்தையும், மக்களும் உலக நியதிப்படி துயரக்கடலுள் மூழ்கிப்போய் அழியுமுன்பு, இந்த உலகத்தில் வேதங்கள் போற்றுகின்ற உனது திருவடிகளைத் தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும். (ஜீவாத்மாக்காளாகிய) பெண்களெல்லாம் (பரமாத்மாவாகிய) உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி, அழகிய திருவுருவக் காட்சிதந்து சிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவனே, திருமாலுக்கும், பிரமனுக்கும், ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து, அன்பில் மயங்கித் திரியும் மற்றைய வேத சிரேஷ்டர்களுக்கும் முன்னால் பிரணவ மந்திரத்தின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதா, வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1025 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, பெருமாளே, மிக்க, வித்த