பாடல் 1024 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு மேவதுப ழிக்கும் ...... விழியாலே ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி லேமருவி மெத்த ...... மருளாகி நாடுநகர் மிக்க வீடுதன மக்கள் நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும் நாடிநர கத்தில் ...... விழலாமோ ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி யாடுமொரு பச்சை ...... மயில்வீரா ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில் ஆருமுய நிற்கு ...... முருகோனே வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில் மேவியகு றத்தி ...... மணவாளா மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. |
இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலே, எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு, என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும், செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும் பேணி நின்று விரும்பி, ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான பிறப்புக்களையே* தேடி நின்று நரகத்தில் விழலாமோ? படம் எடுத்து ஆடும் பாம்பைக் கண்டதும் ஓடி, அதன் உடலைக் கொத்தி நடனம் புரிகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வீரனே, வேதங்கள் கூறும் மெளனத்தை உட்கொண்ட நிலையில் சகல உயிர்களும் வாழ நிற்கின்ற முருகனே, வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தி வள்ளியின் மணவாளனே, முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அத்தேவர்களை மீள்வித்த பெருமாளே.
* ஏழு வகையான பிறப்பு:தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1024 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்த, பெருமாளே, நின்று, கொத்தி, விழலாமோ, பச்சை