பாடல் 1020 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான |
இருட்குழலைக் குலைத்துமுடித் தெழிற்கலையைத் திருத்தியுடுத் திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார இழைக்களபப் பொருப்பணிகச் செடுத்துமறைத் தழைத்துவளைத் திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி பொருட்குமிகத் துதித்திளகிப் புலப்படுசித் திரக்கரணப் புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப் புழுத்தொளையிற் றிளைத்ததனைப் பொறுத்தருளிச் சடக்கெனஅப் புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே உருத்திரரைப் பழித்துலகுக் குகக்கடையப் பெனக்ககனத் துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும் உடுத்தபொலப் பொருப்புவெடித் தொலிப்பமருத் திளைப்பநெருப் பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித் திரைக்கடலுட் படச்சுழலச் செகத்ரையமிப் படிக்கலையச் சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி செருக்கழியத் தெழித்துதிரத் திரைக்கடலிற் சுழித்தலையிற் றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே. |
இருண்ட கூந்தலை கலைத்தும் முடித்தும், அழகிய ஆடையை திருத்தமாக அணிந்தும், இரண்டு கண்களையும் புரட்டி விழித்தும், அதிக கனமான ஆபரணங்களையும் கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற மார்பின் மேல் அணிந்துள்ள கச்சை எடுத்தும் மறைத்தும், அழைப்பு விடுத்தும், வளையல்களைத் திருத்தமாக சரிப்படுத்தியும், சிரித்து உறவு முறைகளைச் சொல்லி உறவாடியும், பொருள் பெறுவதற்கு நிரம்பத் துதித்தும், (பொருளைக் கண்ட பின்) மனம் நெகிழ்ந்தும், தெரிந்த விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்கும் பொது மகளிரின் காமத்துக்கு இடமான, புழுவுக்கு இருப்பிடமாகிய, பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை மன்னித்து வேகமாக அப்புறமான நன்னெறியில் அழைத்து பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக. ருத்திரர்களைப் பழித்தும், உலகத்தை அழிக்க வந்த யுக முடிவில் தோன்றும் பிரளய நீர் என்று பொங்கி எழுந்து, ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் சிதறும்படிச் செய்து, மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள பொன் மலையாகிய மேரு வெடிபட்டு ஒலி எழுப்பவும், காற்று சோர்வு அடையவும், நெருப்பு ஒளித்துக் கொள்ளவும், தத்தம் இருப்பிடத்தை விட்ட தேவர்கள் ஓடிப் போய் அலை வீசும் கடலுள் பட்டு அலைச்சல் உற, மூன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட, (அதைக் கண்டு) சிரித்தும் எதிரே நின்று ஆரவாரித்தும் போர் புரிந்த பாவியாகிய (சூரனுடைய) ஆணவம் அழிபட அவனை அடக்கி அலை வீசும் ரத்தக் கடலின் சுழியிடத்தில் (முழுக்கி) மகிழ்ந்து விளையாடிய வேலாயுதத்தை ஏந்திய குமரப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1020 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்ததனத், வீசும், பெருமாளே, திருத்தமாக