பாடல் 101 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தந்தா தந்தா தந்தா தந்தா தந்தா தந்தத் ...... தனதான |
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் ...... படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் ...... கினியோனே குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ ரும்போய் மங்கப் ...... பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் ...... கொருநாதா கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் ...... பெருமாளே. |
கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன் - இவற்றை ஒத்த கண்கள், பால், மென்மையான வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள், இருளை ஒத்த மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது மாதர்களின் மென்மையான தோள்களைத் தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி, வங்காள நாடு, சோனக நாடு*, சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய் வம்பிலே கொடிய துன்பத்தைப் படலாமோ? வலிமை மிகுந்த தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே, வந்து இந்த நொடியிலேயே என்னை ஆண்டருள்வாயாக. வாசனை மிக்க பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும் வள்ளிமலையில் வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே, சூரனுக்கு அரணாக விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும், பட்டு அழியும்படியாக போர் செய்த சினத்தை உடையவனே, எலும்புகளும் கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய், தேவர்களின் ஒப்பற்ற தலைவனே, சங்குகள் தவழும் கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே, கந்தனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 101 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தா, ஒத்த, மென்மையான, கொடிய, பெருமாளே, படலாமோ, மைந்தா