பாடல் 1018 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான |
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய சொற்பாகைக் காட்டிப் புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் கட்சேலைக் காட்டிக் குழலழ கைத்தோளைக் காட்டித் தரகொடு கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே நிற்பாருக் காட்பட் டுயரிய வித்தாரப் பூக்கட் டிலின்மிசை நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் நெட்டாசைப் பாட்டைத் துரிசற விட்டேறிப் போய்ப்பத் தியருடன் நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை மைச்சாவிக் காக்கைக் கடவுளை விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ...... யிருகாலும் விற்போலக் கோட்டிப் பிறகொரு சற்றேபற் காட்டித் தழலெழு வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் பொற்பாபற் றாக்கைப் புதுமலர் பெட்டேயப் பாற்பட் டுயரிய பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் புட்கானத் தோச்சிக் கிரிமிசை பச்சேனற் காத்துத் திரிதரு பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே. |
கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில் செல்லும் சொற்களின் வெல்லப் பாகைப் போன்ற இனிப்பைக் காட்டி, புனுகு சட்டம், கஸ்தூரி இவைகளின் கலவை பூசப்பட்ட இள நீர் போன்ற மார்பகங்களையும், சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, மத்தியில் தரகர் வைத்துப் பேசி கையிலுள்ள பொருள் கேட்டு, தெருவில் மயில் நிற்பது போல் நிற்கும் வேசியர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயர்ந்ததும் அழகு நிறைந்ததுமானக் கட்டிலின் மேல் நீண்ட நேரம் மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தப் புணர்ச்சியில் எப்போதும் அழிகின்ற நீண்ட ஆசை அனுபவத்தை, குற்றம் நீங்கும்படி விட்டு விலகிப் போய், உன்னிடம் பக்தி கொண்டுள்ள அடியார்களுடன் சேர்ந்து உன்னை நெகிழ்ந்து பாடிப் போற்ற உன் திருவடிகளைப் பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? மந்தர மலையையே மத்தாக அமைத்து திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின்* திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே, அம்புத் திரள் கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய், பறவைகளை தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப் பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே. * திரிபுராதிகள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால் பல அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கைவிடச் செய்தார். அதன் பின்னரே திரிபுரம் எரிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1018 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தத்தானத், தனதன, தாத்தத், நீண்ட, அழகிய, பெருமாளே, பூஜையை, டுயரிய, பாட்டைத், தவறிய, காட்டித், காத்துத்