பாடல் 1017 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த ...... தனதான |
மழையளக பார முங்கு லைந்து வரிபரவு நீல முஞ்சி வந்து மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே மகுடதன பார முங்கு லுங்க மணிகலைக ளேற வுந்தி ரைந்து வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக் குழையஇத ழூற லுண்ட ழுந்தி குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக் குழியிலிழி யாவி தங்க ளொங்கு மதனகலை யாக மங்கள் விஞ்சி குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச இரணகள மாக அன்று சென்று எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே எழுகடலு மேரு வுங்க லங்க விழிபடர்வு தோகை கொண்ட துங்க இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா பொழுதளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலி னும்ப ணிந்து புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே புதியமட லேற வுந்து ணிந்த அரியபரி தாப முந்த ணிந்து புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே. |
மழை போல நீண்ட கூந்தல் பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள நீலோற்பலம் போன்ற கண்களும் செந்நிறம் அடைய, சந்திரன் போன்ற முகமும் வேர்வைத் துளிகள் வந்து கூட, படுக்கையின் மேல் கி¡£டம் போன்ற மார்பகப் பாரமும் குலுங்க, ரத்ன மேகலை முதலிய இடை அணிகள் மிகவும் அலைப்புண்டு விலக, தன் வசம் இழக்கும்படி சேர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு, மனம் குழைய வாயிதழ் ஊறலைப் பருக (காம மயக்கில்) அழுந்தி, புட் குரலுடன் வாய் திறந்து கொஞ்சிப் பேச, சந்திரன் வரக் கண்டு பொங்குகின்ற கங்கையைப் போல குதித்துப் பாய, பெண்குறியாம் குழியில் இழிந்து, பல விதங்களாக விளங்கும் மன்மதக் கலை நூல் விதிகளில் மிகவும் மேம்பட்டு, இளம் பெண்களோடு திளைந்து உடல் நொந்து விடுதல் நன்றோ? போருக்கு எழும் படைகளுடன் சூரர்களாகிய வஞ்சக அசுரர்கள் பயப்பட, போர்க் களம் ரண களமாக அன்று நீ போய் எழு கிரிகளும் பெரிய நிலப் பரப்பும் அசைவு கொள்ள, வேகத்துடன் ஏழு கடல்களும் மேரு மலையும் கலக்கம் கொள்ள, கண்கள் படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட பரிசுத்தமான, தகுதியுள்ள மயிலின் மீது ஏறி கால்களை மாறாகப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த வடி வேலனே, பொழுது அஸ்தமிக்கும் வரையில் பெரிய (வள்ளி மலைக்) குன்றில் குறவர்களுடைய பெண்ணான வள்ளியைக் காலிலும் வணங்கி, வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து, தினைப் புனத்தில் புதிதாக மடலேறுதற்கும்* துணிந்திருந்த அந்த பரிதாப நிலையும் குறைந்து, புளகிதம் கொண்டிருந்த வள்ளியின் மார்பினை அணைந்த பெருமாளே.
* மடல் ஏறுதல் - தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1017 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதனன, சென்று, கொண்ட, கொள்ள, பெரிய, மிகவும், மடல், தலைவியின், மணம், எழுதி, சந்திரன், பெருமாளே, அன்று, ணர்ந்த, வந்து, மேரு, ணிந்து, முங்கு, லுங்க