பாடல் 1016 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பெஹாக்
தாளம் - அங்கதாளம்
- எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம்
- எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த ...... தனதான |
குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ பகைகொள்துரி யோத னன்பி றந்து படைபொருத பார தந்தெ ரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே பழுதறவி யாச னன்றி யம்ப எழுதியவி நாய கன்சி வந்த பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே மிகுதமர சாக ரங்க லங்க எழுசிகர பூத ரங்கு லுங்க விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி விபுதர்குல வேழ மங்கை துங்க பரிமளப டீர கும்ப விம்ப ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே. |
குகையில் தவம் புரியும் நவநாதராகிய* பெருஞ்சித்தர்களும், திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும், விளங்கும் (ஸத்வம், ரஜோ, தாமஸம் ஆகிய) முக்குணங்களும், அசுரரின் தலைவர்களும், அலைகடல் போல் ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும், வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும், வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும், கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும், விரிவான புராணங்களும், உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும், விரிந்துள்ள வேதநூல்கள் பலவும், இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத, அறிவு, அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள அறிவொளி எதுவோ அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து, உன் சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ? பகைமையே உருவான துரியோதனன் தோன்றி படைகளோடு போர் செய்த மகாபாரத வரலாற்றை அறிந்து, பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது, குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொருநாள் சொல்லிவர, அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி, சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மதயானை முகத்துக் கணபதியின் பின்பு, தம்பியாக வந்த முருகனே, மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும், ஏழு சிகரங்களை உடைய மலைகள் யாவும் குலுங்குமாறும், மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து, தேவர் குலத்தவளும், யானை (ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின் பரிசுத்தமான சந்தன மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க திருமார்பைத் தழுவிய பெருமாளே.
* நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.இவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1016 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தகிட, வந்த, தனதனன, நூல்களும், கொன்ற, அசுரனைக், யாவும், சிவந்த, கொண்ட, போர், மிகுந்த, செய்து, தவம், சண்ட, ராரி, ரங்க, யானை, பின்பு, தாமரை, பெருமாளே, ஆகிய