பாடல் 1015 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான |
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள் பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே. |
நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கி¡£டம் அணிந்த தலை சிதறி விழ, பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1015 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்னும், வீசும், ஆகிய, சிதறி, விழவும், கொண்ட, அம்பு, தத்தத், தத்தன, குத்திய, தம்பிரானே, போலவும்