பாடல் 1010 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான |
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத கலசமு மதனுய ரம்பொன் மாமுடி யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி அடைபடு குடயுக ளங்க ளாமென ம்ருகமத களபம ணிந்த சீதள அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி இரவொடு பகலொழி வின்றி மால்தரு மலைகட லளறுப டிந்து வாயமு தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி இருவரு மருவிய ணைந்து பாழ்படு மருவினை யறவும றந்து னீள்தரு மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர் துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள தொலைவறு மலகையி னங்க ளானவை நடமிட நிணமலை துன்ற வேயதில் துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் பருகுத லரியது கந்த தீதிது உளதென குறளிகள் தின்று மெதகு பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா பகிரதி சிறுவவி லங்க லூடுறு குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே. |
மஞ்சள் பூசியுள்ள, அலங்காரமான அமிர்த கலசம் என்றும், மன்மதனுடைய சிறந்த பொன் கி¡£டம் என்றும் சொல்லும்படியாய், இளைஞர்களுடைய மனமும் உயிரும் ஒரு கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் போன்ற இரண்டு என்று சொல்லும்படியாய், கஸ்தூரிக் கலவையை அணிந்துள்ள, குளிர்ச்சி உள்ள, புதுமை வாய்ந்த கனத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடன் லீலைகள் புரிந்து, இரவும் பகலும் ஓய்வே இல்லாமல் மோகத்தைத் தரும் காமக் கடலாகிய சேற்றில் படிந்து, வாயிதழ் ஊறல் இனிக்கும் என்று தர பருகி, அன்பும் இன்பமும் பூண்டு, இருவரும் பொருந்தி அணைந்து பாழாவதற்கு இடமாகும், வினைக்கு இடமான செயலை அடியோடு மறந்து, உனது ஒளி பொருந்திய இரண்டு திருவடிகளையும் நினைந்து வாழ்வதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? தேவர்கள் குலத்துக்குத் தலைவனான இந்திரன், பிரமன், திருமால், மற்றும் (மான்) தோல் உரியை ஆடையாக அணிந்த முனிவர்களும், தேவர்களும் தோத்திரம் செய்ய, எதிர்த்துப் போர் புரிய வந்த அசுரர்கள் அடியோடு இறந்து பட, சோர்வு இல்லாத பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படியாக மாமிச மலை நிரம்ப அவைகளுக்குக் கிடைக்க, அங்ஙனம் கிடைத்த மாமிசத்தில் துவர்ப்புள்ள பாகம் இது, புளிப்பான பாகம் இது, கட்டியாய் உறைந்து போன பாகம் இது, இது கெட்டுப் போனது, உண்பதற்கு உபயோகம் அற்றது, உண்ணத் தகுந்தது இங்கே உள்ளது என்று கூறி பூத பிசாசுகள் உண்டு மிக்க பசி தீரும்படியாக, ஒப்பற்ற தனித்த நிலையில் வெற்றி கொண்ட பராக்ரம மயில் வீரனே, கங்கையின் புதல்வனே, மலையில் வாசம் செய்யும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, அகன்று மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிரவுஞ்ச மலையை ஊடுருவும்படி செலுத்திய வேலாயுதத்தை ஏந்த வல்ல பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1010 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, பாகம், தந்த, இரண்டு, அடியோடு, சொல்லும்படியாய், பெருமாளே, வந்த, தீதிது, என்றும்