பாடல் 1011 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தந்ததான |
உரைதரு பரசம யங்க ளோதுவ துருவென அருவென வொன்றி லாததொ ரொளியென வெளியென வும்ப ராமென ...... இம்பராநின் றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும ...... ழிந்திடாதே பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன பரிசன தெரிசன கந்த வோசைகள் பலநல விதமுள துன்ப மாகிம ...... யங்கிடாதே பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள் பலபல விதமுள துன்ப சாகர படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன் அரகர சிவசுத கந்த னேநின தபயம பயமென நின்று வானவர் அலறிட வொழிகினி யஞ்சி டாதென ...... அஞ்சல்கூறி அடல்தரு நிருதர நந்த வாகினி யமபுர மடையஅ டர்ந்து போர்புரி அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம் விரிகடல் துகளெழ வென்ற வேலவ மரகத கலபசி கண்டி வாகன விரகுள சரவண முந்தை நான்மறை ...... யந்தமோதும் விரைதரு மலரிலி ருந்த வேதனும் விடவர வமளிது யின்ற மாயனும் விமலைகொள் சடையர னும்ப ராவிய ...... தம்பிரானே. |
சொல்லப்படுகின்ற மேலான சமயங்களால் ஓதப்படுவதும், உருவம், உருவமின்மை என்று ஒன்றும் இல்லாததும், பேரொளி என்றும், வெட்ட வெளி என்றும், மேலே உளதென்றும், இங்கே உளதென்றும் நிற்பதாய், உலகங்கள் நிலை பெற்று நிற்க உதவும் பற்றுக் கோடு என்றும் சொல்லும்படியாய் உள்ள அந்தப் பரம் பொருளை உணர்ந்து அறிந்து, மெளன நிலையில் ஞான உணர்ச்சி உண்டாக, அந்த ஞான உணர்ச்சியோடு இருந்து, அத்தகைய நாட்கள் அழிந்து வீண் போகாமல், மேலான நற்கதியை பெறும்படியான பாக்கியம் என்னை விட்டு ஒழிந்து போகும்படி, ஆசைக்கிடம் தரும் ஸ்பரிசம், ரூபம், வாசனை, ருசி, ஓசை முதலான ஐம்புலன்களால் உண்டாகும் பலவிதமான சிற்றின்பங்களைக் கொண்டதான துன்பத்தில் பட்டு நான் மயங்காமல், சிலம்புகள் அணிந்த பாதங்களை உடைய வஞ்சகம் கொண்ட விலைமாதர்கள் பலபல வகையாக உள்ள துன்பக் கடலாகிய பெருங்குழியில் விழுகின்ற பஞ்ச* மகா பாதங்களைச் செய்யும் நான் என்றைக்கு உணர்ந்து கரை ஏறுவேன்? ஹரஹர சிவ குமாரனே, கந்தபிரானே, உனது அடைக்கலம், அடைக்கலம் என்று தேவர்கள் ஓலமிட, (உங்கள் பயம்) இனி ஒழிவதாக, பயப்பட வேண்டாம் என்று அருள் பாலித்து, வலிமை மிக்க அசுரர்கள், அளவற்ற சேனைகள் யமபுரம் சேரவும், நெருங்கிச் சண்டை செய்யும் அசுரன் சூரனுடைய மார்பு கிழிபட, பிளந்தெறிந்த வேகத்தில், பரந்த கடல் வற்றித் தூளெழும்படி வெற்றி கொண்ட வேலவனே, பச்சை நிறமான தோகையைக் கொண்ட மயில் வாகனனே, சாமர்த்தியம் உள்ள சரவணனே, பழைய நான்கு வேதங்களை முடிவு வரை ஓத வல்லவனும், மணம் கமழ் தாமரை மலரில் வீற்றிருந்த பிரமனும், விஷத்தை உடைய ஆதிசேஷனான பாம்புப் படுக்கையில் உறங்கும் மாயோனாகிய திருமாலும், பரிசுத்தமான கங்கையை உடைய சடையைக் கொண்ட சிவபெருமானும் போற்றும் தம்பிரானே.
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1011 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, தந்த, என்றும், தானன, உடைய, உள்ள, அடைக்கலம், செய்யும், உணர்ந்து, நான், மேலான, கந்த, ருந்த, விதமுள, துன்ப, தம்பிரானே, பலபல, உளதென்றும்