பாடல் 1007 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
முருகு செறிகுழ லவிழ்தர முகமதி முடிய வெயர்வர முதுதிரை யமுதன மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக முலையின் மிசையிடு வடமுடி யறஇடை முறியு மெனஇரு பரிபுர மலறிட முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின் றுருகி யுளமுட லுடலொடு செருகிட வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய் துதவு மடமக ளிர்களொடு மமளியி ...... லநுராக உததி யதனிடை விழுகினு மெழுகினும் உழலு கினுமுன தடியிணை எனதுயி ருதவி யெனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி திடமு மிலையென வுலவிட அலகையின் இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ...... லிசைபாட இகலி முதுகள மினமிசை யொடுதனி யிரண பயிரவி பதயுக மிகுநட மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ...... விருகாலும் வரிசை யதனுடன் வளைதர வொருபது மகுட மிருபது புயமுடன் மடிபட வலியி னொருகணை விடுகர முதலரி ...... நெடுமாயன் மருக குருபர சரவண மதில்வரு மகிப சுரபதி பதிபெற அவுணர்கள் மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ...... பெருமாளே. |
நறுமணம் நெருங்கிய கூந்தல் அவிழவும், சந்திரனை ஒத்த முகம் முழுவதும் வியர்வு எழவும், பழமையான (பாற்)கடலில் பிறந்த அமுதம் போன்ற பேச்சு குழற, (கையில் அணிந்த) வளையல்கள் கல் கல் என்று ஒலிக்க, போக இன்பத்துக்கு பாலமான மார்பகத்தின் மேல் அணிந்துள்ள மாலைகள் முடிச்சற்று விழவும், இடை முறிபடும் என்று சொல்லும்படி, (காலில் அணிந்த) இரண்டு சிலம்புகளும் ஓலமிட்டு அலறவும், மலரும் தன்மையுள்ள மலர்களின் இடையே இள நிலவின் ஒளியைப் பற்கள் வீச, இலவம் பூவைப்போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்டு நின்று மனம் உருகி, உடலும் உடலும் ஒன்றோடுன்று பொருந்த, (அம்மாதர்களின்) உயிரும் என்னுயிர் போலவே மிகவும் உறவு கொண்டாடும்படி உதவி செய்கின்ற அழகிய பெண்களுடன் படுக்கையில் காம இச்சையாகிய கடலிடையே வீழ்ந்தாலும், மூழ்கி எழுந்தாலும், அதிலேயே சுழன்றாலும், உனது திருவடிகள் இரண்டும் என் உயிருக்கு உற்ற துணை எனக் கருதி (நான்) உன்னை நினைப்பதையும் போற்றுவதையும் மறக்கமாட்டேன். கழுகுடனே, காக்கையும் கருடனும் ஆகாயத்தில் வெற்றிடம் கொஞ்சமும் இல்லை என்னும்படி நெருங்கி உலவ, பேய்களின் கூட்டங்களும், மாமிசங்களை போர்க்களத்தில் உண்ண அங்கு வந்துள்ள குட்டி வேதாளங்களும் இயல் தமிழ், இசைத் தமிழ்ப் பாடல்களைப் பாட, மாறுபட்டு எதிர்க்கும் முற்றிய போர்க்களத்தில் சுற்றமாகிய கணங்களின் இசைப் பாட்டுடன், தனிச்சிறப்புள்ள ரண பயிரவியின் இரண்டு பாதங்களும் மிக்க நடனத்தைச் செய்யவும், மிகவும் எதிருக்கு எதிராக (ராவணனுக்கு) நேரே நின்று, ஒப்பற்ற வில்லின் இரண்டு முனைகளும் முறைப்படி (கோதண்டத்தை) வளைத்து, (ராவணனது) பத்துத் தலைகளும் இருபது புயங்களுடன் மடிந்து விழ வலிமை வாய்ந்த ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கைகளை உடைய முதல்வனாகிய திருமாலாம் நீண்ட மாயவனுடைய மருகனே, குருபரனே, சரவண மடுவில் தோன்றிய பெருமையாளனே, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் (அவனுடைய) பொன்னுலகைப் பெறவும், அசுரர்கள் இறக்கவும், தகுதி வாய்ந்த மயிலின் மேல் ஏற வரவல்ல பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1007 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, இரண்டு, மிகவும், போர்க்களத்தில், ஒப்பற்ற, வாய்ந்த, உடலும், நின்று, அணிந்த, மேல், சரவண, பெருமாளே