கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்

சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ் சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ் சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே. |
81 |
மயில் வாகனனே, அடியார்களிடத்தில், இன்னருளைக் காட்டும், சிறந்த வேலாயுதத்தை உடையவனே, இலஞ்சிப் பதிக்கு அதிபனே, என்னை இழி சொற்களால் பேசும், இந்த ஊர் மக்களும், மன்மதனும், முத்துக்கள் நிறைந்த சமுத்திரமும், சோலைகளும், சந்திரனும், கட்டிலும், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல் ஓசையும், என்னைப் பெற்றெடுத்த இனிய மொழியை உடைய, தாயாரின், காவலும், பெரிது அல்ல, காமச்சின்னமாகிய அன்றில் பறவையும், காமனின் தேராகிய தென்றல் காற்றும், கொடிய குதிரை முகத்தை உடைய, வடவாமுகாக்னியைப் போல என்னை வருத்துகின்றன. ..
தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த் தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர் தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல் தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. |
82 |
வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண், கங்கா ஜலத்தை, தரித்திருக்கும் பரமசிவனின், மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய, பூமா தேவிக்கும், தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகனே, வளமையான வேதங்கள் எல்லாம், பூஜிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபனே, அக்னியைக் கொட்டிக்கோண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது. ..
தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந் தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல் தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண் தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே. |
83 |
தாமரையில் உற்பவித்த பிரம்மனால், தலையில் எழுதப்பட்ட, அனுபவ பிராப்தம், ஒருகாலும் மாறாது, என்று அறிந்திருந்தும், என்னுடைய புத்தி, மென்மேலும் ஆசைப் படுவதினால், பயன் ஏதும் இல்லை என்று, நினைக்காததற்கு என்ன காரணம்? சேயோனே, பயனற்ற சாத்திரங்களை, அழித்துவிடும், ஆகம நூல்களை அருளியவனே, அக்னி தேவன் .. இந்தத் தீப்பொறி மிகவும் அற்பமானது, என் கரத்தால் மிகவும் சுலபமாகத் தாங்கிச் செல்வேன், .. என்று மமதையுடன் சொல்ல, தன்னுடைய சிவந்த கண்களினால், அந்த அக்னியின், நிறமும் காந்தியும், வருத்தமுறவே, கருகிப் போகும்படி கோபித்தவனே. ..
சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ் சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண் சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே. |
84 |
ஏக வஸ்துவாகிய, சிவபெருமானிடத்தில், ஜெனித்து, வேலாயுதத்தைக் கரத்தில் பிடித்தவனே, தினைப்புனத்தைக் காத்து வந்த, வஞ்சிக் கொடி போன்ற, குறிஞ்சி நிலத்தில் வசித்து வந்த வள்ளி நாயகியின், பக்கத்தை விட்டு நீங்காத, மயில் வீரனே, இவ்வுலகத்தில் சென்று, உன் சிவந்த விழியால், எல்லாவற்றையும் அழித்து வந்த மா மரமாக நின்ற சூரபத்மனை, கோபி கோபி (கோபிப்பாயாக), என்று கூறி வேலாயுதத்தை ஏவிய, வலிமையுடைய வீரனே, மிகுந்த பொறுமை என்னும், பாணத்தின், கூர்மையினால் அடிபட்டு, கோபம் எனகிற மிருகம், விழுந்து விட்டது, உன்னுடைய அருட் பிரகாசம் என்னிடம் கலந்தவுடனே. என்ன ஆச்சரியம் ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தீரா, சிவசிவ, சங்கர, சிகாவல, தென்றலை, வன்பரி, வந்த, யம்பு, சிவந்த, மிகவும், என்ன, வீரனே, கோபி, மயில், சிறந்த, உடைய, என்னை, காமனின், தென்றல், தாமரையில், வேலாயுதத்தை, அதிபனே