கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங் குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. |
71 |
தோலால் செய்யப்பட்ட துருத்தி என்று சொல்லும் படி கும்பகம் செய்து பிராண வாயுவைச் சுழற்றி முறியச் செய்து அவ்வாயுவையே உணவாக உண்பித்து இந்த உடலைத் துன்புறுத்துவதனால் விளையும் பயன் யாது? "சிவயோகம்" என்னும் முளையைத் தெரிந்து ஆறு திருமுகங்களுடைய சற்குருநாதராகிய திருமுருகப்பெருமான் உபதேசித்து அருளிய திருக்கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்வீர்களானால் முக்தியாலாகிய பேரின்பம் உங்கள் கைக்கு எட்டியதாகும்.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. |
72 |
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும் படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடம்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்து தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே. |
73 |
போதலும், வருதலும், இரவும், பகலும், வெளியும், உள்ளிடமும், வாக்கும், உருவமும், இறுதியும், ஒன்றும் இல்லாததாகிய ஒரு பரம்பொருள் அடியேனிடம் மீண்டும் மீண்டும் வந்து சார்ந்து நின்று, தானாகவே அடியேனுக்கு மன ஒடுக்கத்தைத் தந்தருளி அடியேனைத் தன்வயப்படுத்திக் கொள்கின்றபோது உண்டாகின்ற இணையற்ற பேரின்பம் இத்தகையது என்று கூறுவதற்கு இயலாது, ஆறு திருமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற் குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யௌiதல்லவே. |
74 |
பாம்பையணிந்த முடியையுடைய சிவபெருமானுடைய திருமைந்தராகிய திருமுருகப்பெருமானின் திருவருள் வேண்டும். மலர்ந்து நெகிழ்ந்த அன்பினால் குரா மலர் மாலையையும் தண்டையையும் அணிந்துள்ள அழகிய திருவடிகளை வணங்க வேண்டும். கொடிய ஐம்புலன்களின் வேடிக்கை ஒழிய வேண்டும். மனமும் துடிப்பு நீங்குதல் வேண்டும். இவற்றை அடையப் பெறாவிடின் இரவு பகல் இல்லாத இடத்தில் சும்மா இருத்தல் எளிதாகாதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வேண்டும், வாக்கும், மீண்டும், கொடிய, பகலும், மனமும், சிவந்த, செய்து, வாயுவைச், உங்கள், பேரின்பம், செந்தமிழ், துருத்தி