திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் | 25 |
துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் |
உலர்ந்த மயிரில் உச்சிக் கொண்டை என்னும்படி மகரப் பகுவாய் என்னும் பொன்னணித் தலைப்பூவைக் காதுகளுக்கு மேல் பின்புறம் தாழும்படி தலைமுடியில் திருகிப் பொருத்தி யிருந்தனர். மேலும் குளுமைதரும் சண்பகப்பூவைச் செருகியிருந்தனர். மருதம்பூக் கொத்தை மாட்டியிருந்தனர்.
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . . இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக |
30 |
வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் |
கிளைத்துப் பூக்கும் கீழ்நீர் அரும்புகளை இணைத்த பிணையலையும் அசோகந் தளிரினையும் காதுகளுக்குத் துணை என்னும்படி அவர்கள் அணிந்திருந்தனர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் |
35 |
வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர |
நெஞ்சில் சந்தனம். அது வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையைப் பூப்போல் தேய்த்து உருவாக்கப்பட்டது. அங்கே கோங்கம்பூப் போன்ற இளமுலை. அதில் மருதம்பூவின் நுண்தாது கொட்டிக்கிடப்பது போல் சந்தனம் அப்பிக் கிடந்தது. அதன் மேல் வேங்கைப் பூவின் நுண்ணிய தாதுகளும் அப்பப்பட்டிருந்தன. அது கண்ணுக்கினிய கவர்ச்சியைத் தந்தது.
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் 'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரி'ெதன்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி |
40 |
சூரர மகளிர் ஆடும் சோலை |
விளாமரத் தளிர்களை (அல்லது வில்வத் தளிர்களை)ப் பறித்துப் போட்டுப் பூசை செய்துகொண்டு அவர்கள் ஆடினர். கோழி ஓங்கிய வெற்றிக்கொடி வாழிய.. என்று பலவாறாகப் பலரும் கூடிப் புகழ்ந்து பாடிக்கொண்டே ஆடினர். சூரர மகளிரின் இந்த ஆட்டமும் பாட்டும் மலையெல்லாம் எதிரொலித்தது.
காந்தளின் கண்ணி சூடிய சென்னியன்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் |
முருகன் காந்தள் மலர் மாலையைத் தலையில் அணிந்திருப்பான். அந்தப் பூக்கள் மந்தியும் அறியாத மரமடர்ந்த மலையடுக்குப் பகுதியில் வண்டுகளும் மொய்க்க முடியாமல் மிகுதியாகப் பூத்துக் கிடப்பவை. (முருகனைக் காந்தளங் கண்ணிச் சென்னியன் என்று சொல்லிப் பாராட்டினர்)
முருகன் சூரனைத் தடிந்த வகை
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் | 45 |
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் |
கடலின் உள்ளே சென்று சுடர்வீசும் இலைபோன்ற தன்வேலை வீசிச் சூரபனமனின் குல முதலையே கொன்றழித்த கொற்றவன் என்று போற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, சென்னியன், தளிர்களை, ஆடினர், சூரர, மந்தியும், தடிந்த, முருகன், வாழிய, கண்ணி, சந்தனம், பகுவாய், மகரப், சங்க, பெருந்தண், என்னும்படி, அப்பிக், மேல், ஓங்கிய