திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு

பேய்மகளின் துணங்கைக் கூத்து
உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு |
50 |
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் |
அஞ்சுவரு பேய்மகளின் அலங்கோலம் பரட்டையாய்க் கிடக்கும் தலைமயிர்.வரிசை மாறிப் பிறழ்ந்திருக்கும் பல்.பிளந்த வாய்.சுழலும் விழிகள்.பசுமை நிறக் கண்ணில் சுட்டெரிக்கும் பார்வை.கோட்டானும் பாம்பும் தொங்கும் முலை முகடுகள்.நீண்ட காதுகளும் முலை முகடுகளில் தொங்கின. அச்சம் தரும் நடையும் தோற்றமும் கொண்டவள்.
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற் கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா |
55 |
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க |
போரில் வீழ்ந்தவர்களின் கணகளைத் தோண்டி உண்டதால் குருதி படிந்திருக்கும் விரல் நகங்களைக் கொண்டவள். கண்ணைத் தோண்டிய பின்னர் கழிமுடை நாற்றமடிக்கும் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு அவள் ஆடுகிறாள். அவளது கைகளிலே வளையல்கள் அந்தக் கைகள் தலையை ஏந்திக் கொண்டிருப்பதால் தோளைப் புடைத்துக் கொண்டு அவர்கள் துணங்கை ஆடுகின்றனர். சூரபதுமனை வென்றழித்த போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடிக்கொண்டே பேய்மகளிர் துணங்கை ஆடுகின்றனர்.
மாமரத்தை வெட்டிய வெற்றி
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து |
60 |
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் |
முருகன் தன் ஒரே ஒரு பேருடம்பில் இருபேர் உருவங்களில் காட்சி தருபவன். ஒன்று ஆண்டிக் கோலம். மற்றொன்று ஆறுமுகக் கோலம். கவிழ்ந்த இலைகளையுடைய மாமரமாகி நின்ற அவுணர் கொட்டம் அடங்க அம்மாமரத்தை முருகன் வேரோடு வெட்டிச் சாய்த்தான். செவ்வேலை வீசிப் பெற்ற இக்கொற்றம் குறையாத புகழைக் கொண்டது. அவன் சேய்.
ஆற்றுப்படுத்தல்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும் செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப |
65 |
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே |
அவனது திருவடிகளாகிய கொழுகொம்புகளைப் பற்றிக்கொண்டு படரும் உள்ளம் இருந்தால் அது நல்லதை விரும்பும் கொள்கையாகும். அதற்கு நீ உனது புல அறிவைப் பிரிந்து அவன் நினைவாகவே வாழ வேண்டியிருக்கும். அவன் குடிகொண்டுள்ள இடங்களுக்கு நீ செல்ல விரும்பினால் உன்னுடைய நெஞ்சத்தில் அந்த ஆசை நன்றாக வலுக்கட்டும். நினைத்ததை உடனே செயல் படுத்துவாயாக.
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து |
70 |
மாடமலி மறுகின் கூடற் குடவயின் |
போரை விரும்பி ஆடவர் உயர்த்திய கொடிகள் மதுரையில் எப்போதும் பறந்துகொண்டேயிருக்கும். மகளிர் பந்தும் பாவையும் விளையாடிக் கொண்டிருப்பர். போரிட்டோரைத் தேய்த்துத் தேய்த்துப் போரிடுவர் இல்லாமல் போனதால் செல்வத் திருமகள் அரியணை ஏறி ஆண்டுகொண்டிருப்பாள். இப்படிப்பட்ட கடைத்தெருக்களும் மாடமறுகுகளும் கூடியிருப்பதுதான் கூடல் எனப்படும் மதுரை
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் |
75 |
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று |
மதுரைக்கு மேற்கில் வளமான வயற்பகுதி. அந்த அகன்ற வயலின் சேற்றில் அவிழ்ந்து கிடப்பவை தாமரை மலர்கள். (முருகனை வழிபடும் ஆடவர் கண்களைப் போல அந்தத் தாமரை மலர்கள்.) ஆங்காங்கே சுனைகள். சுனைகளில் நெய்தல் பூக்கள். (முருகனை வழிபடும் மகளிர் கண்களைப் போல நெய்தல் பூக்கள்.) வண்டுகள் தாமரைப் பூவிலும் நெய்தல் பூவிலும் மாறி மாறி அமர்ந்து காமம் மருவிக் கனத்துக் கிடக்கும். வைகறை விடியலில் தாமரையிலும், பொழுது போன மாலை வேளையில் நெய்தலிலும் கள் அருந்தும். அவ் வயலை அடுத்த குன்றில் குடியிருத்தலும் அம் முருகனுக்கு உரியது. அதுவன்றி…
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், நெய்தல், திருமுருகாற்றுப்படை, அவன், துணங்கை, முருகன், பத்துப்பாட்டு, தாமரை, மலர்கள், மகளிர், ஆடவர், முருகனை, வழிபடும், மாறி, பூவிலும், பூக்கள், கண்களைப், அந்த, படரும், குருதி, கொண்டவள், முலை, கிடக்கும், தூங்கப், ஆடுகின்றனர், சங்க, கோலம், பேய்மகளின், அவுணர், அஞ்சுவரு