திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்ந்து வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நூல்
1. திருப்பரங்குன்றம்
குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன்
தெய்வயானையின் கணவன்
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . |
5 |
மறுவில் கற்பின் வாணுதற் கணவன் |
உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சி. அதன் கவின் பேர் அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இமைக்கிறான். மனன் ஏர்பு திரிதருகிறான். அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து பாய்கிறது. தடை இல்லாமல் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்திலும் காலவெள்ளத்திலும் பாய்கிறது.துன்புறுவோரைத் தாங்குவதே முருகனது மதக்கொள்கை. அவனது திருவடிகளின் நோன்பும் அதுதான். துன்பத்தைப் போக்கும் அவன் செயலை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்துத் தேய்க்கும். மழைபோன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்புநெறியினளாகிய தெய்வானைக்கு அவன் கணவன்.
கடப்பமாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து |
10 |
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் |
சூலுற்ற மழைமேகங்கள் வானத்தில் வாள்போல் மின்னி வளம்தரும் மழைத்துளிகளைப் பொழியும். கோடைக்குப் பிறகு பெய்யும் அந்த முதன்மழையால் கானம் இருண்டு பசுமையாகும். வெண்கடம்பு மரங்கள் தழைத்துப் பூத்துக் குலுங்கும். அப்பூக்களே முருகன் மார்பில் புரளும் தார்மாலைகள்.
சூரர மகளிரின் இயல்பு
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், |
15 |
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், |
பசுமையால் ஆசைமூட்டி மலையுச்சி இருண்டு கிடக்கும். அங்கே சூரர மகளிர் ஆடுவர். அவர்களுக்குக் கிண்கிணி (கொலுசு) கௌவிக் கிடக்கும் சிறிய அடிகள். கணையமரம்போல் உறுதியான கால்கள். வளைந்த இடுப்பு. பெருமை கொண்ட தோள். தொய்வு இல்லாமல் ஆடுவதற்கு வசதியாக அவர்கள் இடையில் உடுத்தியிருந்த வெல்வெட்டுப் பூந்துணி கோபம் என்னும் தம்பலப் பூச்சிபோல் சிவந்திருக்கும். அதன்மேல் காசுவரிசை தொங்கும் சில்காழ் என்னும் சிறிய நடன-இடுப்பணி இருக்கும். இது அவர்களது அல்குலை மறைத்துத் தொங்கிக்கொண்டு ஆடும்.
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, |
அவர்களின் மேனி கைபுனைந்து இயற்றாக் கவின்பேர் அழகினை யுடையது. எனினும் அந்த இநற்கை அழகுக்குமேல் மணிநாவல் என்னும் பொன்னணி அணிந்திருந்தனர். நாவல்பழ நிறத்தில் மணிக்கற்கள் பொன்னில் பதிக்கப்பட்டிருந்ததால் அது மணிநாவல் எனப்பட்டது. அதன் ஒளி தொலைதூரத்திலும் மின்னியது.
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் |
20 |
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் |
சூரர மகளிரின் மாசில்லா மேனியானது தொலைவினைக் கடந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. நெருக்கமான ஈர மினுமினுப்புக் கொண்ட அவர்களது கூந்தலை அவர்களுக்குத் துணையிருக்கும் தோழிமார் ஆய்ந்து ஒப்பனை செய்திருந்தனர். வெட்சிச் செடியில் பூத்த சிவந்த காம்பையுடைய மலர்களையும் நீரில் பசுமையான கொடித் தாளினையுடைய குவளைப் பூக்களில் கிள்ளிய இதழ்களையும் தெய்வ உந்தியையும் வலம்புரியையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் இருக்கும்படிக் கூந்தலின்மேல் அணிவித்திருந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், அவனது, கணவன், திருமுருகாற்றுப்படை, முருகன், சூரர, என்னும், புரளும், பத்துப்பாட்டு, கொண்ட, சிறிய, கிடக்கும், கிண்கிணி, சில்காழ், அவர்களது, கைபுனைந்து, வெட்சிச், தெய்வ, மணிநாவல், மேனி, இயற்றாக், மகளிரின், சங்க, உலகம், பெயரைச், சார்ந்து, பெருமை, நூல், பாட்டுடைத், பாய்கிறது, இல்லாமல், அந்த, இருண்டு, மார்பினன், இந்நூல், அவன், தலைவன்