மலைபடுகடாம் - பத்துப்பாட்டு

நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை
கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் கூவை காணிற் படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக் கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ |
425 |
ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே |
கூளியர் அம்பு விட்டால் கூப்பிடு தூரம் சென்று இலக்கைச் சரியாகத் தாக்கும். அவர்கள் வாழும் கூவைக் குடிசைகளைக் கண்டால், நன்னனைப் பார்க்கச் செல்கிறோம் என்று சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள். யாரும் உங்களிடம் குறும்பு செய்ய மாட்டார்கள். சமைத்த கிழங்கும், புலால் கறியும் எல்லாருடைய வீட்டிலிருந்தும் வாங்கிவந்து உண்ணத் தருவார்கள். நன்னன் உலகிலுள்ள பகைவர் அனைவரையும் நெருஞ்சி முள்ளைத் தேய்ப்பது போல் காலால் தேய்த்துப் போட்டவன். பணியாத ஆளுமைத் திறம் பெற்றவன். நில மடந்தையின் கணவன்.
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்
தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும் உம்பல் அகைத்த ஒண்முறி யாவும் தளிரொடு மிடைந்த காமரு கண்ணி |
430 |
திரங்குமர னாரிற் பொலியச் சூடி முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின் |
முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பப் பூவையும், மேட்டு நிலங்களில் பூத்த பல்வேறு தளிர்களையும் சேர்த்து மரல் நாரில் கட்டித் தலையில் சூடி அழகு படுத்திக் கொள்ளுங்கள். முரம்பு நிலம் கண் உடைந்து அதில் ஊற்றாக வந்து நடந்தோடும் நீரில் விளையாடுங்கள். அது ஊற்றெடுக்கும் பகுதியிலுள்ள நீரைப் பருகுங்கள். தொடர்ந்து செல்லுங்கள்.
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்
செவ்வீ வேங்கைப் பூவி னன்ன வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த |
435 |
சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ் அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் |
வேங்கைப் பூ சிவப்பாக மலரும். வெந்தால் அதுபோல் மலரக்கூடியது மூங்கில் அரிசிச் சோறும், நன்செய் அல்லாத புன்செய் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லஞ்சோறும் ஆகும். அந்தச் சோற்றுக்கு அவரைக்காய்ப் புளிக்குழம்பு. தெருக்களில் மூங்கில் கழிகளின்மேல் புல்லால் வேய்ந்த குடிசை. அந்தக் குடிசைகளில் எல்லாம் அந்த அவரைக்காய்ப் புளிக்குழம்புச் சோற்றை நடந்துவந்த களைப்புத் தீரப் பெறலாம்.
பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி | 440 |
வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலை தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் |
அமலை என்பது பொங்கல் சோறு. அது தங்கம் இறைந்து கிடப்பது போன்று காணப்பட்டது. வழுவழுப்பாக உள்ள நுண்ணிய இழுது போன்ற வெண்ணெய் போட்டுச் சமைக்கப் பட்ட நெய்ச்சோறு அது. அசதிக்குத் தங்கும் இடங்களில் எல்லாம் இதனை நீங்கள் பெறலாம்.
விசையங் கொழித்த பூழி யன்ன உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை |
445 |
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப் புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின் |
நுவணை என்பது தினை. விசயம் என்பது ‘அல்வா’ப் பண்ணியம் (பலகாரம்). நுண் இடி என்பது தினைமாவு விசயம், நுவணை ஆகியவற்றை உண்ணத் தருவார்கள். தங்கும் இடங்களில் எரியும் கனப்புக்-கட்டையின் [ஞெகிழியின்] வெதுவெதுப்பு மலையின் குளிரைப் போக்கும். அந்த மலைமக்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் உறங்கலாம். பொழுது புலர்ந்து விடியும்போது பறவைகள் ஒலியெழுப்பும். அதைக் கேட்டு எழுந்து நன்னன் இருப்பிடம் நோக்கிச் செல்லலாம்.
நன்னனது தண் பணை நாட்டின் தன்மை
புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப் |
450 |
பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும் பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும் நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே |
காவிலும் களத்திலும் யாழிசை மீட்டிக்கொண்டு ஆங்காங்கே பலநாள் தங்கியும் செல்லலாம்.- புல்லைப் போல் வேர் பிரியும் அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். அதில் ஆற்றுப்புனல் பாய்ந்து பாதி வேரை அரித்து விட்டது. மீதி பாதி வேர் மேட்டுநிலத்தில் பிடித்துக் கொண்டு நின்றது. அது போல் மரம்கொண்ட ஊர்கள் பல. அந்த ஊர்களில் சீரிய யாழ்ப்பண்ணைப் போல் ஒலி தரும் காடுகள் பல. பள்ளிகளிலும் அந்த ஒலி. பல நாள் அங்குத் தங்கினாலும், அந்த ஊருக்குப் போனவுடனேயே சென்று விட்டாலும் நன்னன் வளவயல் நாட்டில் பெறும் நன்மைகள் பலப்பல.
உழவர் செய்யும் உபசாரம்
கண்புமலி பழனங் கமழத் துழைஇ வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை |
455 |
நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற் பிடிக்கை யன்ன செங்கண் வராஅல் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப் பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த |
460 |
விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் |
பழனம் – பழமையான வளவயல் பகுதிகளிலெல்லாம் மீன் வாடை வீசும். வலையோர் – பழனங்களில் வாளை மீனை வலை போட்டுப் பிடித்து வருவார்கள். நிலையோர் – வரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்து வருவார்கள். இந்த வரால் மீன் யானையின் துதிக்கை போல உருவம் கொண்டிருக்கும். பழையர் மகளிர் – வாளை மீன்களைத் துடியின் வாய் போல் நறுக்கி, வயலில் பிடித்து வந்த நண்டையும் சேர்த்துச் சமைப்பார்கள். சமைத்த அந்தக் குழம்பைத் ‘தராய்’ என்னும் தூக்குப்பாத்திரத்தில், வைக்கோல் போரின் ஓரத்தில் வைத்துக்கொண்டு வழங்குவார்கள். வளஞ்செய் வினைஞர் (உழவர்) – மலைபோல் குவித்து நெல்லை [வல்சி என்னும் உணவுப்பண்டம்] அடித்துக் கொண்டு வந்து நல்குவார்கள். பசும்பொதித் தேறல் – உழவர் மகளிர் வடித்த பச்சரிசிக் கஞ்சியைப் பதப்படுத்திய தேறலைத் தருவார்கள். இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் – வெயில் இளகிய காலையிலும், மாலையிலும் வயலில் உள்ள போர்களங்களில் சொம்பு சொம்பாக [தசும்பு] இவற்றைப் பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, அந்த, போல், என்பது, தருவார்கள், இலக்கியங்கள், நுவணை, பெறலாம், பத்துப்பாட்டு, உழவர், வாளை, மகளிர், மலைபடுகடாம், பெறுகுவிர், சூடி, நன்னன், பிடித்து, பாதி, வேர், செல்லலாம், வளவயல், விசயம், அன்ன, கொண்டு, வல்சி, வருவார்கள், போட்டுப், வரால், வயலில், என்னும், மீன், ஞாயிற்றுக், வளஞ்செய், வினைஞர், தேறல், இளங்கதிர், பழையர், அமலை, மேட்டு, கழிமின், அதில், வந்து, வேய்ந்த, உண்ணத், சமைத்த, சங்க, கூப்பிடு, கூளியர், சென்று, குடிசைகளில், வேங்கைப், தன்ன, உள்ள, தங்கும், இடங்களில், எல்லாம், அந்தக், அரிசி, தியற்றிய, மூங்கில், அவரைக்காய்ப், யன்ன