மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

பரத்தையரது வாழ்க்கை
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ் தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்த |
560 |
வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ மேதகு தகைய மிகுநல மெய்திப் |
565 |
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர் திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக் கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்த |
570 |
சேயரு நணியரு நலனயந்து வந்த இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும் மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர் நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து |
575 |
பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக் கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில் |
மாய மகளிர் - இந்த அணங்குகள்தான் மேலே சொன்னவாறு தன் அழகைப் பார்த்துத் தானே மயங்கி மாலைக்காலம் வந்ததும் ஒப்பனை செய்துகொண்டவர்கள். அவர்கள் தெருவில் உலாத்திக்கொண்டு வருவார்கள். யாழ் மீட்டிக் கொண்டு வருவார்கள். ஏழிசைப்பண் பாடிக்கொண்டு வருவார்கள். அவர்களை விரும்பியவரைத் தழுவிக்கொண்டு வருவார்கள். நீர்மேகத் திரட்சி போன்ற கூந்தலைப் பின்புறம் பறக்கவிட்டுக்கொண்டு வருவார்கள். அந்தக் கூந்தல் வானமெல்லாம் கமழும். வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு வருவார்கள். கூந்தலில் அணிந்துள்ள மொட்டு விரியும் பூ தெருவெல்லாம் கமழும். தகைமை என்னும் அவர்களது கச்சிதமான உடலழகில் மென்மை தவழும். அதில் மிகுதியான ஒப்பனை நலமும் செய்திருப்பர். குவளைமலர்க் கூட்டம் வண்டுகள் மொய்க்கும்போது தானே வாய் திறந்து மோந்து பார்ப்பவர்களுக்கு மணம் வீசுவது போல் அவர்களின் மேனியே மணம் வீசும். தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கீழைக் காற்றால் கொண்டல்மழை பொழியும்போது பூத்துக் குலுங்கும் குட்டிப்பிலாத்தி மலர்ச்செடி போல் உடல் முழுவதையும் பூவால் ஒப்பனை செய்து கொண்டிருப்பார்கள். நாடி வந்தவர்களின் நெஞ்சில் தாம் அணிந்திருக்கும் நுட்பமான அணிகலன்கள் பதியும் அளவுக்கு இறுக்கித் தழுவுவார்கள். அத்தனையும் மாயம், பொய், பொருளைக் கவர்ந்து கொள்ளப் போவதை மறைத்து வஞ்சனையாகத் தழுவுவார்கள். தொலைவிலிருந்தும் அருகாமையிலிருந்தும் வரும் செல்வவளம் மிக்க இளைஞர்களின் உடல்வளத்தையும், பண வளத்தையும் வாங்கிக்கொண்டு அவர்களைத் துறந்து விடுவர். தேனை எடுத்துக்கொண்ட பின் வண்டானது தேன் தந்த பூவை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தேன் தரும் பூவுக்குத் தாவுவது போல் இவர்கள் வேறு செல்வக் காளையரைத் தேடிக்கொள்வர். தழுவிய ஆண்களின் நெஞ்சம் ஏமாந்து போவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. பழத்தைத் தின்ற பறவைகள் பழம் இருக்கும் வேறு மரத்தைத் தேடிச் செல்வது போன்றது அவர்களின் வாழ்க்கை. என்றாலும் கொழுத்த பணக்காரர்களும் காமக் கொழுப்பு ஏறிய பிறரும் இவர்களை விரும்பி அவர்கள் வாழும் ஓங்கி உயர்ந்த இல்லங்களுக்குச் சென்று தழுவுவார்கள்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர் ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி |
580 |
நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவ மகளிர் மானக் கண்டோர் நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர் யாம நல்யாழ் நாப்ப ணின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப் |
585 |
பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க் கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக் |
கொண்டி மகளிர் என்போர் மாயம் செய்யும் வரைவின் மகளிர் அல்லர். யாருக்கும் அடங்காமல் கொண்டித்தனம் செய்யும் மகளிர். பிறரது நெஞ்சை நடுங்கச் செய்பவர்கள். வானவ மகளிர் மற்றவர் மயங்க ஆடுவர். யாருக்கும் எந்த உடலின்பமும் தர மாட்டார்கள். இவர்கள் தங்க வளையல் மின்னும்படியும் பூண்டிருக்கும் புதிய அணிகலன்கள் பொலியும்படியும் பலராகக் கூடி விளக்கு வெளிச்சத்தில் விளையாடுவார்கள். இந்த வானவ மகளிர் போல் கொண்டிமகளிர் நள்ளிரவில் கூடி விளையாடுவர். யாழில் பண் இசைத்துப் பாடுவர். முழவிசைக்கேற்ப ஆடுவர். ஆழமான நீர்த்துறைகளை அடுத்துக் குவிந்திருக்கும் மணலில் விளையாடுவர். ஆடும் விளையாட்டில் சலிப்பு தோன்றும்போது அதனை விட்டுவிட்டுப் பூப்பறிக்கும் விளையாட்டில் ஈடுபடுவர். நீரில் நனைவதைப் பொருட்படுத்தாமல் குவளை மலர்களைப் பறித்து அதன் காம்புகளை நன்றாக அலசிவிட்டுக் கட்டாக மனைக்குக் கொண்டுசென்று அழகுபடுத்தி வைத்துக்கொண்டு பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். பொய்தல் என்பது பொருள்களை மறைத்தும், ஆள் மறைந்தும் விளையாடும் விளையாட்டு.
ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் | 590 |
மாயோன் மேய ஓண நன்னாட் கோணந் தின்ற வடுவாழ் முகத்த சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை மறங்கொள் சேரி மாறுபொரு செருவில் மாறா துற்ற வடுப்படு நெற்றிச் |
595 |
சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக் கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக் |
திருவோணத் திருநாளில் யானை அணிவகுப்புத் திருவிழா நடைபெறும். அதனைக் காணவரும் மக்கள் கூட்டம் விரைந்து வரும் யானையைப் பார்த்து அஞ்சி ஓடும். அப்போது அவர்கள் தம் மார்பில் அணிந்துள்ள காழகம் என்னும் அணிகலன் க.ன்று விழுவதையும் பொருட்படுத்தாமல் ஓடுவர். அவை நிலத்தில் கிடந்து ஓடுபவர்களின் காலில் உருத்தும். அவுணரைக் கடந்ததாகப் பாடல் கூறுவதற்கு இந்தக் கதையே அடிப்படை. மதுரையிலும் இந்த நன்னாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது உலாவந்த யானைகளின் பெருமை பாடலில் சொல்லப்படுகிறது. யானையின் முகத்தில் அங்குசம் குத்தி ஆறிய புண்ணின் தழும்பு இருந்தது. துதிக்கையில் அந்தப் புண்ணின் தழும்பு. அந்தக் கை எதிரிகளைத் தடுத்து நிறுத்தியவை. நெற்றியில் சேரிக் கதவுகளை முட்டித் தாக்கிய தழும்பு. யானையை ஓட்டிவந்த மறவர் வண்டு மொய்க்கும் மலர்மாலை அணிந்திருந்தனர்.
புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து | 600 |
பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப் புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளநீர் அயரத் |
மக்களைப் பெற்று கணவனோடு வாழும் இல்லத்தரசியர் பருத்துயர்ந்த இளைய மார்பகங்களில் பால் ஊறக் குளநீர் ஆடச் சென்றனர். குழந்தை பெற்ற ஈரக்காலம் முடிந்தபின் சென்றனர். சுற்றத்தாரோடு சென்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, மகளிர், வருவார்கள், இலக்கியங்கள், போல், மறவர், மதுரைக்காஞ்சி, தழுவுவார்கள், ஒப்பனை, தின்ற, பத்துப்பாட்டு, தழும்பு, சென்றனர், வானவ, ஆடுவர், செய்யும், குவளை, கூடி, யாருக்கும், பொருட்படுத்தாமல், விளையாட்டு, புண்ணின், குளநீர், பொய்தல், ஆடும், விளையாடுவர், விளையாட்டில், விளையாடுவார்கள், வரும், கமழும், வளையல், அணிந்துள்ள, அந்தக், தானே, சங்க, வாழ்க்கை, துறந்து, என்னும், கூட்டம், தேன், இவர்கள், வேறு, மாயம், அணிகலன்கள், மணம், அவர்களின், வாழும்