மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

பண்டங்கள் விற்கும் வணிகர்
அறநெறி பிழையா தாற்றி னொழுகி | 500 |
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற் பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி மலையவு நிலத்தவு நீரவும் பிறவும் பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு |
505 |
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் |
நாற் பெருங் குழு
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் |
510 |
வணிக மாடங்கள் - பயிர் செய்தும், கைசெய்தும் பண்ணப்பட்ட பண்டங்களைப் ‘பண்ணியம்’ என்றனர். இக்காலத்தில் இதனை ‘மளிகை’ என்று வழங்குகிறோம் பயிர்செய்து பெற்ற பொருள்களைப் ‘பண்டம்’ என்றும், கைவினைப் பொருள்களைப் ‘பண்ணியம்’ என்றும் இப் பாடற்பகுதி தெளிவுபடுத்துகிறது. பண்டம் உணவாகப் பயன்படும் என்றும், மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், நீரிலிருந்தும் பெறப்படும் என்றும் இப்பகுதி ககூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும் மணி, முத்து, பொன் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டவை ‘பண்ணியம்’. பண்டங்களையும் , பண்ணியங்களையும் விற்பனை செய்வோர் அறநெறி பிழையாமல் நன்னடத்தை கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது வீடுகள் குன்றுகள் போன்றவை. பருந்துகள் அமர்ந்து இரை தேடும் அளவுக்கு உயரமான அடுக்கு மாடிகளைக் கொண்டவை.
நாற்பெருங் குழு - (அமைச்சர், புரோகிதர் என்னும் புரையோர், தூதன், ஒற்றன், படைத்தலைவன் ஆகியோரை அரசனின் ஐம்பெருங்குழு என்று நிகண்டு நூல் தொகுத்து உரைக்கிறது.) (அத்துடன் அரசனின் பெருஞ்சுற்றம் என்று ஐவரை நிகண்டு குறிப்பிடுகிறது. படைத்தொழிலாளர், நிமித்தம் பார்ப்பவர், ஆயுள் வேதியர், நட்பாளர், அந்தணர் என்னும் அறவோர் – என்போர் அந்த ஐவர்.) (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் – 6ம் என்று திருக்குறள் 381 தொகுத்துப் பார்க்கும்போது, அரணமைதியை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது, படைத்தலைவர், குடிமக்களின் பிரதிநிதியாகக் கொள்ளத் தக்க ‘கிழார்’ போன்றோர். செல்வப் பெருமக்கள், அமைச்சர், நண்பர் – ஆகிய ஐவரை ஐம்பெருங்குழுஎன்று கொள்ள வேண்டியுள்ளது.) இந்த நூலில் பேசப்படுவது ‘நாற்பெருங் குழு’. இந்த நாற்பெருங்குழு எது? அந்தணர் (அடி 474) அறிஞர் (481). அறங்கூறும் அவைத்தலைவர் (492) – ஆகியோர் எனக் கொள்வது ஒருவகையில் பொருத்தமானது. இவ்வாறு கொள்வது கூறியது கூறலாக அமையும். என்றாலும் மோகூர் அரசவையில் நான்மொழிக் கோசர் வீற்றிருந்தது போல் மதுரை அரசவையில் நாற்பெருங்குழு இருந்தது என்று கூறப்படுவதால் , 4 மொழி பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர் எனல் மிகப் பொருத்தமானது. அக்காலத்தில் வழக்கில் இருந்த வடமொழி பாலி, தெலுங்கு, கன்னடம் – ஆகியவை அந்த 4 மொழிகள் என்க. இங்குக் குறிப்பிடப்படும் மோகூர் மதுரையின் ஒரு பகுதியாக உள்ளது.
பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம்
கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் பூவும் புகையும் ஆயு மாக்களும் |
515 |
எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித் தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல் குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் |
520 |
சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக் |
நால்வேறு தெரு என்று இங்குக் கூறப்படுவது முன்பு கூறிய நாற்பெருங்குழு மேன்மக்கள் வாழ்ந்த நான்கு தெருக்கள். இக்காலத்திலும் மதுரையின் அமைப்பு நாற்றிசைப் பெயர்கொண்ட தெருக்களைக் கொண்டு விளங்குவது ஒப்பிட்டு எண்ணத் தக்கது. இந்த நால்வேறு தெருக்களிலும் நடந்து கொண்டே விற்போரும், துணி பரப்பிப் பொருள் கிடத்தி விற்போரும், கடை வைத்துக் கலைத்தொழில் செய்து விற்போரும் எனப் பல்திறப்பட்ட வணிகர்கள் வாணிகம் செய்தனர். சங்கை அறுத்துக் கடைந்து வளையல் செய்வோர். பவளம் போன்ற மணிகளைக் கோப்பதற்கு ஓட்டை போடுவோர். தங்கத்தைச் சுட்டு அணிகலன் செய்வோர். தங்கத்தை உரைத்துப் பார்த்து மதிப்பீடு செய்வோர். வேட்டி முதலான கலிங்கம் விற்போர். செம்பாலான பாத்திரம் விற்போர். மகளிர் சட்டையில் மணிமுடிந்து அழகுபடுத்துவோர். ஓவியம் தீட்டியும், படிமம் செய்தும் விற்கும் கண்ணுள் வினைஞர். மற்றும் பலரும் சிறியதும் பெரியதுமான துணிகளை விரித்து விற்பனை செய்தனர். மக்கள் கடலலை போல நடமாடுகையில் அவர்களின் துணிவிரிப்புக் கடைகள் கடலோர மணல் போல் காணப்பட்டன. கால் வலிக்க நின்றுகொண்டு விற்றவர்களும் உண்டு.
பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந் தண்கட னாடன் ஒண்பூங் கோதை பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ |
525 |
விழைவுகொள் கம்பலை கடுப்பப் |
உணவு வகைகள்
பலவுடன் சேறு நாற்றமும் பலவின் சுளையும் வேறுபடக் கவினிய தேமாங் கனியும் பல்வே றுருவிற் காயும் பழனும் கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி |
530 |
மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும் அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும் கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் இன்சோறு தருநர் பல்வயி னுகர |
535 |
சேறு (பழ மசியல்), நாற்றம் (பத்தி சந்தனம் ஏலம் போன்ற மணப்பொருள்கள்), பலாப்பழச் சுளை, பல்வேறு உருவம் கொண்ட இனிப்பு மாம்பழங்கள், பலதிறப்பட்ட காய்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, சமைத்த உணவு வகைகள், சமைத்த கிழங்கு வகைகள், இனிப்புப் பண்டங்கள், முதலானவற்றை வாங்கி ஆங்காங்கே தின்றுகொண்டிருந்தனர். வெற்றிலை - கீழைக்காற்று வீசும்போது கொடி படர்ந்து அழகாகத் துளிர் விட்டு விரிந்துள்ள இளம் இலை, பாக்கு - கடிகை என்னும் கொட்டை நிலையில் இருந்தாலும் மெல்லும்போது சேறாகி அமிழ்தம் போல் இனிப்பது. கடைத்தெருவில் உணவுப் பண்டங்களை மக்கள் வாங்கித் தின்ற ஆரவாரப் பாங்கு எப்படியிருந்தது? சேர நாட்டில் கோதை மன்னன் வெற்றி விழா கொண்டாடியபோது அவனது நாளவையில் விழுமியோர் கூடியிருக்கையில் யாழும் இயமும் இசை கூட்டிக் கோடியர் என்னும் இசைவாணர் கூட்டம் வாழ்த்தும்போது எழும் கம்பலை ஆரவாரம் போல இருந்தது.
அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி
வாலிதை எடுத்த வளிதரு வங்கம் பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத் தொல்லென் இமிழிசை மானக் கல்லென நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப் பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம |
540 |
இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து உருகெழு பானாள் வருவன பெயர்தலிற் பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே அல்லங் காடி அழிதரு கம்பலை |
கடலலையானது கழிமுகத்தில் பாய்ந்து தழுவிவிட்டுத் திரும்பும்போது ஒதுக்கிய இரைகளைத் தின்ற பறவைகள் மாலைநேரம் வந்ததும் இருப்பிடத்துக்குத் திரும்பும்போது தம் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகள் ஒன்று திரள்வதற்காக ஒலி எழுப்புவது போல, மாலைநேரக் கடைகளில் ஆரவாரம் மிகுந்தது. பானாள் = பால் நாள் = பாதி நாள் (‘பானாள் கங்குல்’ என்னும்போது இரவாகிய கங்குலில் பாதிநாள். அதாவது நள்ளிரவாகிய யாமம்). தெருக்கடை நாளங்காடி போய் அல்லங்காடிக்குப் பொருள்களைக் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் நிலை எப்படி இருந்தது? கடலலை கழித்துறையில் கடற்பொருட்களை ஒதுக்கிவிட்டுத் தரைப்பொருட்களை எடுத்துச் செல்வது போல் இருந்தது. வால் இதை = வலிமை மிக்க பாய்மரம் (ஒப்பு நோக்கி இணைத்துக் கொள்க; திருக்குறள் ‘வாலறிவன்’ – வாலறிவு = வலிமை மிக்க இறிவு). காவிரிப்பூம்பட்டினத்தில் காற்றால் செலுத்தப்படும் பாய்மரக் கப்பல்களிலிருந்து பல்வேறு பண்டங்களை இறக்குமதி செய்யும்போது எழுப்பப்படும் மகிழ்ச்சி ஆரவாரம் போலவும் அல்லங்காடி கம்பலை இருந்தது.
இரவுக் கால நிலை
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து | 545 |
சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல் நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர் |
உருப்பு ஒளி = கடும் வெயில். ஞாயிறு ஒளியும் வெயிலுமாகிய தன் சினம் தணிந்து தன் நன்பகல் பொழுதை மேலைத்திசை முதலில் சேர்த்தது. அப்போது கீழைத்திசை முதலில் 15 நாள் முதிர்ந்த மதியம் தோன்றித் தன் நிலவொளியை விரித்துப் பகல்செய்து கொண்டிருந்தது. இதனை விரும்பியவர்கள் அதன் பயனைத் துய்க்கலாயினர்.
காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த | 550 |
தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப் பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் |
555 |
நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர் எல்லை எல்லா நோயொடு புகுந்து கல்லென் மாலை நீங்க நாணுக்கொள |
மானைப் போல் மருளும் பார்வை கொண்ட மகளிர் தம் பெண்மைத் தன்மையைத் தாமே கண்டு மகிழ்ந்தனர். அதனால் தம் காதலரோடு கலந்து இன்புற விரும்பினர். அதற்காகத் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். குளுமை தரும் கழுநீர்ப் பூக்களைப் பறித்துவந்து அதன் இதழ்களைத் துணைப்படுத்தி நாரால் மாலை கட்டினர். நன்கு நீண்டு வளர்ந்துள்ள கூந்தலை நீராட்டுவதற்காக நரந்தம் என்னும் மணப் பொருளை அரைத்தனர். அணியப்போகும் மெல்லிய நூலாடைக்கு நறுமணம் கமழும் புகையை ஊட்டினர். சுவர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளை ஏற்றினர். நெடுநகராகிய வீட்டில் பகலெல்லாம் காதலனைப் பிரிந்திருக்கும் துன்ப நோயோடு வாழ்ந்தவர்கள், இரவு வந்ததும் காதலனை எதிர்கொள்வதை விடுத்து அவன் வருகையை எண்ணியவுடன் நாணினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, பல்வேறு, என்னும், போல், கம்பலை, ஆரவாரம், இலக்கியங்கள், என்றும், செய்வோர், நாற்பெருங்குழு, வகைகள், மகளிர், மதுரைக்காஞ்சி, நால்வேறு, விற்போரும், ‘பண்ணியம்’, பத்துப்பாட்டு, நாள், மக்கள், பலரும், பறவைகள், கடலலை, முதலில், வினைஞர், வந்ததும், செய்தனர், நிலை, மாலை, விற்போர், வுற்ற, வலிமை, உணவு, ஞாயிறு, சமைத்த, பண்டங்களை, தின்ற, பானாள், பாக்கு, குழீஇ, சேறு, திரும்பும்போது, கொண்ட, மிக்க, வெற்றிலை, எழும், மதுரையின், தோன்றி, குழு, பகர்நரும், நாற்பெருங், செய்தும், பொருள்களைப், இதனை, திருமணி, பிறவும், விற்கும், பண்டங்கள், அறநெறி, பிழையா, கவினி, சங்க, கொண்டு, விற்பனை, மோகூர், பொருத்தமானது, கொள்வது, அரசவையில், இங்குக், கலிங்கம், கூட்டம், பார்க்கும்போது, திருக்குறள், அரசனின், அமைச்சர், நிகண்டு, ஐவரை, அந்த, அந்தணர், கண்ணுள்