ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.081.திருப்பாண்டிக்கொடுமுடி
5.081.திருப்பாண்டிக்கொடுமுடி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர்.
தேவியார் - பண்மொழியம்மை.
1875 | சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. |
5.081.1 |
உயர்ந்தவனை, சிவனை, செழுஞ்சோதி வடிவானவனை, எட்டு மூர்த்தியை, கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை, திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம்.
1876 | பிரமன் மாலறியாத பெருமையன் தரும மாகிய தத்துவ னெம்பிரான் பரம னாருறை பாண்டிக் கொடுமுடி கரும மாகத் தொழுமட நெஞ்சமே. |
5.081.2 |
அறிவற்ற நெஞ்சமே! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும், தருமவடிவாகிய தத்துவ வடிவினனும், எம்பிரானும், பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடுமுடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக.
1877 | ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி ஈச னேயெனு மித்தனை யல்லது பேசு மாறறி யாளொரு பேதையே. |
5.081.3 |
ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள்; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள்; தேசமாம் திருப்பாண்டிக் கொடுமுடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள்.
1878 | தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் காண்டலுமௌ யன்னடி யார்கட்குப் பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான். |
5.081.4 |
தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன்; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன்.
1879 | நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன் திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக் கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே. |
5.081.5 |
இராவணனது அம்முடிகளை நெருக்கி, புகழை உடைய வானவர் நின்று இருக்கு வேதம் உரைத்துப் பணிந்து ஏத்த இருந்தவனுடைய "திருக்கொடுமுடி" என்றலும் தீவினையின் கருக்கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.081.திருப்பாண்டிக்கொடுமுடி , கொடுமுடி, பாண்டிக், திருப்பாண்டிக்கொடுமுடி, திருமுறை, திருப்பாண்டிக், லாளல்லள், பரமனைக், கைகண்ட, வானவர், நெருக்கி, பெருமான், நம்வினை, தேவாரப், ஐந்தாம், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், தத்துவ, மூர்த்தியை, நெஞ்சமே