ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.082.திருவான்மியூர்

5.082.திருவான்மியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர்.
தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி.
1880 | விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே. |
5.082.1 |
விரிந்தமாமலர்களைக் கொண்டு விரைந்து நீர், தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக; முன்பு செய்த பாவங்கள் கெடும்.
1881 | பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர் மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் தருளு மாவல்ல ஆதியா யென்றலும் மருள றுத்திடும் வான்மியூ ரீசனே. |
5.082.2 |
பொருளும், சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளுமாறுவல்ல ஆதியாய்! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன்.
1882 | மந்த மாகிய சிந்தை மயக்கறுத் தந்த மில்குணத் தானை யடைந்துநின் றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே. |
5.082.3 |
மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே! ஈசனே! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும்.
1883 | உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலால் கள்ள முள்ள வழிக்கசி வானலன் வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை வள்ள லாகிய வான்மியூ ரீசனே. |
5.082.4 |
கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன், உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன்.
1884 | படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத் தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. |
5.082.5 |
படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன், தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான்.
1885 | நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார் பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்று அஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே. |
5.082.6 |
"நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார்; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே!ழு என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர்.
1886 | நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக் குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர் சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர் வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. |
5.082.7 |
நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான்.
1887 | ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப் பாதி பெண்ணுரு வாய பரமனென் றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர் வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே. |
5.082.8 |
வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன். பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான்.
1888 | ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னங் கழலடி நாட்டி நாண்மலர் தூவி வலஞ்சயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசசெ. |
5.082.9 |
ஓட்டைமாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன், தன்கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான்.
1889 | பார மாக மலையெடுத் தான்றனைச் சீர மாகத் திருவிர லூன்றினான் ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும் வார மாயினன் வான்மியூ ரீசனே. |
5.082.10 |
பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும், ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.082.திருவான்மியூர் , வான்மியூ, ரீசனே, வான்மியூர், ஈசன், நின்றிடும், தூவி, தீர்த்திடும், நின்று, உடைய, திருமுறை, வந்து, திருவான்மியூர், நாண்மலர், நினைக்க, கொண்ட, மடங்க, தேவாரப், ஐந்தாம், திருமாலும், வணங்க, சுணங்கு, நெஞ்சில், பதிகங்கள், ஏத்த, மயக்கம், மயக்கறுத், மாற்றி, மாந்தரை, கொண்டு, திருச்சிற்றம்பலம், நீர், உள்ளம், தேத்தவல், உள்ள, தொடர்ந்து