ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.080.திருஅன்பில்ஆலந்துறை

5.080.திருஅன்பில்ஆலந்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்திவாகீசர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
1865 | வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக் கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே. |
5.080.1 |
நெஞ்சே! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை; நீ கெடுவாய், பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக.
1866 | கார ணத்தர் கருத்தர் கபாலியார் வார ணத்துரி போர்த்த மணாளனார் ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை நார ணற்கரி யானொரு நம்பியே. |
5.080.2 |
அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி, உலககாரணரும், கருத்தில் உள்ளவரும்,பிரமகபாலம் கொண்ட கையினரும், யானை உரிபோர்த்த மணாளரும், வேதப்பொருள் ஆயவரும் ஆவர்.
1867 | அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன் அன்பி லானையம் மானையள் ளூறிய அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே. |
5.080.3 |
அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும், எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய, அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை, நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள்.
1868 | சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை பங்க னாரடி பாவியேன் நானுய்ய அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச் செங்க ணாரடிச் சேரவும் வல்லனே. |
5.080.4 |
உள்ளதும் ஐயம்; சாவதேமெய்; ஆதலால் உமை பங்கரும், அழகிய கண்ணை உடையவரும், எந்தையும், அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே!.
1869 | கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் அக்க ரையின ரன்பிலா லந்துறை நக்கு ருவரும் நம்மை யறிவரே. |
5.080.5 |
கொக்கிறகை உடையவரும், குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும், சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும், அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர்.
1870 | வெள்ள முள்ள விரிசடை நந்தியைக் கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார் அள்ள லார்வய லன்பிலா லந்துறை உள்ள வாறறி யார்சில ரூமரே. |
5.080.6 |
கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகிய பெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள்; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந்துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார்.
1871 | பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும் உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை மறவா தேதொழு தேத்தி வணங்குமே. |
5.080.7 |
பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல், அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக.
1872 | நுணங்கு நூலயன் மாலு மிருவரும் பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா அணங்க னெம்பிரா னன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. |
5.080.8 |
நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர்; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக.
1873 | பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக் கையன் மாருரை கேளா தெழுமினோ ஐய னெம்பிரா னன்பிலா லந்துறை மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே. |
5.080.9 |
எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும், சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின்; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர்.
1874 | இலங்கை வேந்த னிருபது தோளிற்று மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன் அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே. |
5.080.10 |
இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.080.திருஅன்பில்ஆலந்துறை , லந்துறை, னன்பிலா, அன்பிலாலந்துறையை, னெம்பிரா, திருஅன்பில்ஆலந்துறை, அன்பிலாலந்துறையில், உள்ள, திருமுறை, முள்ள, உடையவரும், கண்ணை, நம்மை, உடைய, சேவடி, இலங்கை, இறைவன், வணங்குவீராக, காணும், வல்லனே, மனத்தவர், ஆகிய, சூடிய, யன்பிலா, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஐந்தாம், தேவாரப், செல்வனைக், வல்லமை, அன்பினால், பாவியேன், அன்பி, ஆவர், திரு, அன்பில், சேரவும்