பாடல் 999 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான |
போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென் ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின் காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே. |
தாமரைப் பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு அரிதான வகையில், தக்க சமயத்தில் (அவர்கள் இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன் உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு, அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும் வகையில் (உன்னைப்) போற்றி செய்ய, இருந்த உனது திருவடிகளை எனது நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? காதை நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும் கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின் இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின் கருமை நிறைந்த கூந்தலால், மலை போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால், நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து, மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே, சமுத்திரம் அன்று எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற, வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 999 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, அடைந்து, தாத்தன, தந்தன, உன்னை, புகழ், பெருமாளே, னும்படி, நீங்காத, வகையில்