பாடல் 9 7 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - சிந்து
பைரவி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான |
வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம் கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்சு செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய் சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு மந்த ரஞ்செ ழுங்க ரும்பு கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே தண்க டங்க டந்து சென்று பண்க டங்க டர்ந்த இன்சொல் திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே அந்த கன்க லங்க வந்த கந்த ரங்க லந்த சிந்து ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா அம்பு னம்பு குந்த நண்பர் சம்பு நன்பு ரந்த ரன்த ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே. |
மீண்டும் மீண்டும் என்முன் வந்து, தவழ்ந்து, விரும்பத்தக்க இன்பத்தை அளித்து நின்று, பால் வேண்டும் வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும், இந்தப் பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும் செம்பொன் மண்டபங்கள் நிறைந்த வீடும், பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய, குங்குமம் அப்பிய மார்புகளும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும், எனக்கு ஆதரவு என்று இருந்த என் அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில், கோங்குப்பூ, அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர், தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள் - இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக. சந்தன மரம், அடர்த்தியாக அரும்புவிடும் மந்தாரம், செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம் வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே, குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று இசைப்பண்கள் யாவும் கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின் செழிப்பான தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட தலைவனே, யமன் அருகே வருவதற்கு கலங்கி அஞ்சும்படியாக, (உன் அடியார்களின் இதயமாகிய) குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை சிறப்பாக வந்து மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே, அழகிய தினைப்புனத்தில் உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும், சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள், கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 9 7 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, வந்து, கந்த, வந்த, னம்பு, சென்று, டங்க, நண்பர், மீண்டும், செழிப்பான, வேண்டும், ரும்பு, தம்பிரானே, மந்த, மண்ட, மொஞ்சி, நின்று, ழுந்த, செம்பொன், சிந்து, குந்த, பங்க, டம்பு