பாடல் 961 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தந்தன தந்தன தனதன தனனத் தந்தன தந்தன தனதன தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான |
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே புகலச் சங்கிசை கண்டம தனிலெழ உருவச் செந்துவர் தந்தத ரமுமருள் புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே பருகித் தின்றிட லஞ்சுக மெனமன துருகிக் குங்கும சந்தன மதிவியர் படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே பலருக் குங்கடை யென்றெனை யிகழவு மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை வரவச் சங்கொடு வந்திடு முழையுடல் சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு திரமிற் றங்கிய கும்பக னொருபது தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள் சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே வடவெற் பங்கய லன்றணி குசசர வணையிற் றங்கிய பங்கய முகதமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே. |
புருவமாகிய வில்லை ஏந்தி இரண்டு கண்களாகிய அம்புகளைத் தொடுத்தெறிய, மார்பகங்கள் ஆகிய இரண்டு மத யானைகள் சண்டை செய்ய, முத்தத்தைத் தருகின்ற இனிமை வாய்ந்த உபசார வழிகளாலே, பேசும்போது சங்கின் ஒலி போன்ற சப்தம் கழுத்தில் (புட் குரலாக) உண்டாக, நிறம் செம்மை வாய்ந்த பவளம் போன்ற வாயிதழ் தருகின்ற எழில் வாய்ந்த தாம்பூல எச்சில் சிலவற்றைக் கொடுக்க (உணர்ச்சி) எழும் மனதால், (அந்த எச்சிலைக்) குடித்து உண்ணுதல் நல்ல சுகமாம் என்று மனம் உருகி, குங்குமமும் சந்தனமும் அதிக வேர்வையினால் கலந்து படிய, களிப்பையும் இன்பத்தையும் தருகின்ற புணர்ச்சித் தொழிலாலே, நான் பலருக்கும் கீழானவன் என்று என்னை இவ்வுலகம் இகழும்படியாக, காம மயக்கத்தைத் தருகின்ற அரிய (விலை) மாதர்களை மிக்க பலமாக நம்பிப் பிடித்துக் கொண்டுள்ள தீயோனாகிய நானும் உனது திருவடியைப் பணிய மாட்டேனோ? லக்ஷ்மியாகிய சீதையை அழைத்துக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியம் என்னும் காட்டில் வந்த பொழுது, பயத்தோடு வந்து உலவிய (மா¡£சனாகிய) பொன்மானின் உடல் பாணத்தால் சிதறி அழியவும், துஷ்டர்களான கொடிய கரன், திரிசிரன்* என்னும் அசுரர்களையும், வலிமை கொண்டிருந்த கும்பகர்ணனையும், பத்துத் தலைகளைப் பெற்று தேவர்களை வென்றவனுமான ராவணனையும், (கோதண்டம் என்னும்) வில்லால் கொன்ற திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருகனே, (வாசனை கொண்ட) மருக் கொழுந்தைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய உமா தேவி, சிவபெருமானுக்குத் தனது அன்பைத் தருகின்ற அம்பிகை, கெளரி, இமய மலை அரசன் பெற்ற சங்கரி தனது கருணையைக் காட்டும் முருகோனே, வடக்கே உள்ள இமய மலைக்கு அங்கே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திரு முகத்தை உடையவனே, தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி** என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமாளே.
* சூர்ப்பனகையின் சகோதரர்களான கரன், தூஷணன், திரிசிரன் என்ற மூவரும் தண்டகாரண்யத்தில் அவளது காதும், மூக்கும் லக்ஷ்மணனால் வெட்டப்பட்டபோது உதவிக்கு வந்தனர். அவர்களில் இருவரைக் கொன்றது ராமபாணம்.
** இது இப்போது கிளி மண்டபம் என வழங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 961 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தருகின்ற, என்னும், தனனத், வாய்ந்த, தனதன, கரன், தனது, வளர்ந்த, உள்ள, நல்ல, அழகிய, இரண்டு, றங்கிய, தந்தரு, சங்கரி, முருகோனே, பங்கய, பெருமாளே