பாடல் 960 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான |
சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ் சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச் சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை பாவ மானபிற விக்கடலு ழப்பவனை தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ வாத வூரனைம தித்தொருகு ருக்களென ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ் மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு ராம ¡£ணமயி லொக்கமது ரைப்பதியின் மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே. |
குளிர்ந்த மணம் பொருந்திய மலர் அணிந்த கூந்தலை அலங்கரித்து, முகத்தில் உள்ள மயக்குவதான வேல் போன்ற கண்களைச் சுழற்றி, புன் சிரிப்பு முத்துப் போன்ற பற்களினின்று தோன்ற, தேமல் படர்ந்த மார்பகத்தில் உள்ள இளமை விளங்கும் மலை பொன்ற மார்பகங்களின் மீது பளபள என்று விளங்கும் முத்து மாலை சேர்ந்துள்ள சித்திரப் பதுமையோ என்னும்படி உடலை மினுக்கி, அதிக காமப் பற்றையும் நட்பையும் உண்டாக்கி, அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு, நடந்துவந்து, தோகை விளங்கும் மயிலின் இனமாம் என்று சொல்லும்படி, வந்தவர்களை விரட்டியும், நடித்தும் தங்கள் வலையில் வீழ்ந்த பேர்வழிகளை தம்மை இரந்து வேண்டும்படியான வழிக்குக் கொண்டுவர முயற்சித்து, இறப்பதற்கே நோயும் பிணியும் வரும்படிச் செய்து துன்பம் உண்டு பண்ணுபவர்களாகிய விலைமாதர்கள் பால், பாய்ந்து, காமத்தில் மூழ்கி, அறிவு கெட்டு துன்பம் அடைந்தவனை, பாவத்துக்குக் காரணமான பிறவிக் கடலில் உழல்பவனாகிய என்னை, மாலைகள் விளங்கும் திருவடிப் பத்தியில நீ இருத்தி வைப்பதும் என்றைக்கோ? திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும், நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில் மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின் முன்பு சிரித்தும், வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண் சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே, வேதம் ஓதும் நன் மக்கள், பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட, வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே, (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தை மீட்டுத் தந்த** தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கி கடலுள் மறைந்தான். திருமால் மச்சாவதாரம் எடுத்து சோமுகனைக் கொன்று வேத நூல்களை மீட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 960 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, பாதம், விளங்கும், மார்க்கம், தானதன, ஆகிய, உள்ள, தொழில், இடுதல், கொண்டு, ஞானம், உடல், துன்பம், மாது, தேமல், மீது, மாலை, என்னும்படி, அறிவு