பாடல் 941 - பட்டாலியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன ...... தனதான |
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள் சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச் சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர் சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின் மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின் மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம் வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே வெங்கைச்சுக் ¡£பர் படையையி லங்கைக்குப் போக விடவல வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர் கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே. |
சந்தேகக் கூச்சலோடு வாதம் செய்யக் கூடியுள்ள ஆறு வகையான சமயத்தினர்களும் தாம் உறுதி செய்து கொண்டு பேசுகின்ற பல விதமான சாஸ்திர ஞானச் சண்டைகளுக்கு வேண்டிய அறிவு போதும் போதும். கடவுளுக்குப் பூஜை செய்பவர்களுடைய செல்வமாகிய அறிவும் போதும் போதும். இமய மலை அரசனின் பெண்ணாகிய பார்வதிக்குப் பாகர் என்றும், முனிவர்கள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும் திருவடியைத் துதிக்க ஓதி விளக்கியுள்ள சிவ நூல்களில் கூறப்பட்ட மந்திரங்களின் கணக்குப் பிரமாண காட்சியை விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவும் போதும் போதும். இவ்வாறு வீணான சுற்று வழிகளில் நான் திரிந்து அலையாமல் மேலான வீட்டுப் பேற்றை அருள்வாயாக. மிக்க ஆற்றலைக் கொண்ட சுக்¡£வனுடைய வானர சேனையை (கடல் கடந்து) இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனும், வெற்றியையே தருகின்ற சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மனம் மகிழும் மருகனே, வெண் பட்டு அணிந்துள்ளது போல் நல்ல அழகிய பாக்கு மரங்கள் மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்வதால் வெயில் மறைபடுகின்ற வயலூரில் வீற்றிருப்பவனே, உனது மார்புக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது, உனது செவ்விய கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும், உனது கூந்தலுக்கு கரு மேகம் ஒப்பாகும் என்று காட்டில் இருந்த வள்ளியை கும்பிட்டுத் துதித்து வணங்கிய, கொஞ்சிப் பேசி இனிய சொற்களைக் கொண்டு பாடிப் பரவிய, இளையவனே, கொங்கு நாட்டில் உள்ள பட்டாலி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 941 - பட்டாலியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போதும், தந்தத்தத், உள்ள, கேள்வி, தனதன, உனது, ஒப்பாகும், பட்டாலி, என்றும், கொண்டு, யலமல, பேசி, பாகு, பெருமாளே, அறிவும்