பாடல் 931 - திருவெஞ்சமாக்கூடல் - திருப்புகழ்

ராகம் - சுத்த தன்யாசி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனாத் தானத் ...... தனதான |
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி மந்திபோற் காலப் ...... பிணிசாடிச் செண்டுபோற் பாசத் ...... துடனாடிச் சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே தொண்டராற் காணப் ...... பெறுவோனே துங்கவேற் கானத் ...... துறைவோனே மிண்டராற் காணக் ...... கிடையானே வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே. |
வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும், குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும், செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. உன் அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவனே, தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவனே, ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவனே, திருவெஞ்சமாக்கூடல்* என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவெஞ்சமாக்கூடல் திருத்தலம் கரூர் ரயில் நிலையத்துக்குத் தெற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 931 - திருவெஞ்சமாக்கூடல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எவ்வாறு, நான், அவ்வாறு, தேடிக், காணக், பெருமாளே