பாடல் 904 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - பேகடா
தாளம் - ஆதி
தன்னா தனத்தன தன்னா தனத்தன தன்னா தனத்தன ...... தந்ததான |
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. |
என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, உன்னைக் கற்றறியா¡ர் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*, அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் அவனது கி¡£டம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தி வள்ளியின் தலைவனே, வயலூரின்** அரசனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.
* வயலூரில் முருகன் தன் சக்தி வேலை ஓரிடத்தில் பாய்ச்சி அங்கு ஒரு தடாகத்தை உண்டாக்கினான். அத்தடாகம் சக்தி தீர்த்தம் எனப்படும். அதன் நீர் பளிங்கு போன்று தெளிவானது.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 904 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நான், என்னால், என்னா, மன்னா, தன்னா, தனத்தன, முருகன், சக்தி, வயலூர், தலைவனே, ஓரிடத்தில், செயலால், எனக்கு, அரசனே, தடாகத்தை