பாடல் 896 - அத்திக்கரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான |
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை சுற்றிக்கல னிட்டுக் கடிதரு சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே சுத்தத்தைய கற்றிப் பெரியவர் சொற்றப்பிய கத்தைப் புரிபுல சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல் முக்குற்றம கற்றிப் பலகலை கற்றுப்பிழை யற்றுத் தனையுணர் முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே முத்தித்தவ சுற்றுக் கதியுறு சத்தைத்தெரி சித்துக் கரையகல் முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே திக்கெட்டும டக்கிக் கடவுள ருக்குப்பணி கற்பித் தருளறு சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர் செச்சைப்புய மற்றுப் புகவொரு சத்திப்படை விட்டுச் சுரர்பதி சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே அக்கைப்புனை கொச்சைக் குறமகள் அச்சத்தையொ ழித்துக் கரிவரும் அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே அப்பைப்பிறை யைக்கட் டியசடை அத்தர்க்கரு மைப்புத் திரவிரி அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே. |
உடலின் தோலைக் கழுவி, அழகுள்ள ஆடையைக் கட்டிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து, வாசனை வீசுகின்ற, மயக்கி வசப்படுத்தவல்ல சாந்தைப் பூசிக் கொள்பவர்களாகிய விலைமாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் மகிழ்ச்சியால், பரிசுத்தமான நிலையை நீக்கிவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதியைக் கேளாது நடந்து, பாபச் செயல்களைச் செய்யும் ஐம்புலன்கள் முதலான பல சுற்றத்தார்கள் அழைத்துச் செல்லும் வழியில் சென்று, இந்தப் பூமியில் (நான்) திரியாமல், காமம், வெகுளி, மயக்கம் எனப்படும் மூன்று குற்றங்களையும் நீக்கி, கலை நூல்கள் பலவற்றைக் கற்று, பிழையான வழிகளை நீக்கி, தன்னை அறிந்த பரிசுத்தமான ஞானிகளுக்கு அடிமை பூண்டு, (அத்தகைய ஒழுக்கத்தால்) விளக்கம் உறும் அறிவைக் கொண்டு, முக்தியை அளிக்கக் கூடிய தவ நிலையை அடைந்து, வீடு பேற்றைத் தரவல்ல சத்தியமான பொருளைத் தரிசித்து, எல்லையில்லாத முக்தி என்னும் சமுத்திரத்தில் நான் புகுமாறு வரத்தை எனக்குத் தந்து அருள்க. எட்டு திசைகளையும் அடக்கி வெற்றி கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் வேலைகளைக் கட்டளை இட்டு, கருணை என்பதே இல்லாத கடின மனத்துடன் நெருங்கிவந்து, படையைக் கொண்டு போர்க்களத்தில் சண்டை செய்யும் சூரர்களின் ரத்தத்தால் சிவந்த தோள்கள் அற்று விழும்படி ஒப்பற்ற சக்தி வேற் படையைச் செலுத்தி, தேவர்கள் தலைவனான இந்திரன் மனத் துயரத்தை நீக்கி, பொன்னுலகை மீண்டும் பெற அருளியவனே, சங்கு மாலையை அணிந்த, பாமர குலத்தவளாகிய குறப் பெண் வள்ளியின் பயத்தை நீக்கி, (கணபதியாகிய) யானை எதிரில் வந்த சிறு சந்தில் அவளைத் தன்னிடம் அழைத்து, அன்பாக அணைந்தவனே, கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் முடித்துள்ள சடைப் பெருமானாகிய சிவனுக்கு அருமைப் பிள்ளையே, விளக்கமுற்றுப் பொலியும் அத்திக்கரை** என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே.
* புலி நால்வகைச் சாந்துகளில் ஒன்று (பீதம், கலவை, வட்டிகை, புலி).
** அத்திக்கரை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 896 - அத்திக்கரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நீக்கி, தத்தத்தன, தனதன, தத்தத், கொண்டு, தேவர்கள், புலி, நான், என்னும், நிலையை, கற்றிப், அத்திக்கரை, பெருமாளே, பரிசுத்தமான, செய்யும்