பாடல் 887 - திருவையாறு - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல் சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை துவர தோஇல வோதெரி யாஇடை துகளி லாவன மோபிடி யோநடை துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப் பரிவி னாலெனை யாளுக நானொரு பழுதி லானென வாணுத லாரொடு பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப் பரவை மீதழி யாவகை ஞானிகள் பரவு நீள்புக ழேயது வாமிகு பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே கரிய மேனிய னானிரை யாள்பவன் அரிய ராவணை மேல்வளர் மாமுகில் கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக் கபடன் மாமுடி யாறுட னாலுமொர் கணையி னால்நில மீதுற நூறிய கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே திரிபு ராதிகள் தூளெழ வானவர் திகழ வேமுனி யாவருள் கூர்பவர் தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே சிகர பூதர நீறுசெய் வேலவ திமிர மோகர வீரதி வாகர திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே. |
கூந்தல் மழையாய் சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? கண்கள் ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ? தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? வாயிதழ் கொவ்வைக் கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில் அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம் சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? கரு நிற உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால், (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம் போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய) மார்பைப் பிளந்த நரசிம்மன், வலிமையான மாயங்களில் வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே, திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும், தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை தூளாக்கி அழித்த வேலவனே, அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில்* வீற்றிருக்கும் தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே.
* திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் காவேரி ஆற்றின் கரையில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 887 - திருவையாறு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, அல்லது, என்னும், தானோ, சிறந்த, திருமால், மேல், வல்ல, கனகன், உடைய, பெருமாளே, ஞானிகள், கரிய, கருணை