பாடல் 875 - திருச்சத்திமுத்தம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான |
கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர் கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி ...... யணியாலே கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ் கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை ...... விலகாது கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு கயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ விக்குழையின் ...... மிசைதாவுங் களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள் கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ ...... தொழியேனோ அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில் அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு ...... மழகோனே அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ...... மதிசூரா விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள் உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு ...... மொருமாயோன் விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு ...... பெருமாளே. |
மத யானையின் தந்தம் போல ஒளியுடன் வெளிப்பட்டு, யாவரும் மிகவும் வியக்கத்தக்க வகையில் (வேசையரின்) மார்பிடம் முழுவதும் நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்தின ஆபரணத்தின் கனம் கொண்டதும், ஒளி விளங்கும் சிமிழ் போல நன்றாகத் தோன்றும்படி இன்பம் கொடுக்கும் தாமரை மொட்டுப் போன்றதும், அன்புடன் பாராட்டப்பட்டு அமைந்துள்ள மார்பகத்தை நறு மணம் கொண்ட சிவந்த நிறமான கலவைச் சாந்து, நிரம்பியுள்ள தனத்தை விட்டு நீங்காது. விஷத்தையும், மாவடுவையும் போல் அமைந்து, புருவமான வில்லின் கீழ்ச் சிக்க வைத்த செயலுக்கு ஒப்ப நின்று, ஒளி வீசிப் புரளுவதாய் மீன் போன்ற கண்களை விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின் மீது பாய, கள்ளத்தனமான மன்மதனுக்கு வெற்றியைக் கொடுத்து உலவுகின்ற, கடுமையான (விஷம் போன்ற) சொற்களைப் பேச (அதனால்) சோர்ந்து, அந்தக் கொடி போன்ற இடை உடைய விலைமாதர் வலையில் சிக்குண்டு அழுத்தப் படுவதால் நான் துன்புறுவது நீங்க மாட்டேனோ? சாம்பல் பூசுகின்ற, (சூரியன் சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சொல்லி அரிய மறைப் பொருளை உபதேசித்து, பெருத்த மயில் வாகனத்தில் ஏறி முன்பு நடத்தி உலகத்தை ஒரு கணப்பொழுதினில் சுற்றி வலம் வந்த அழகனே, வஞ்சகம் மிக்க மொழிகளைப் பேசி, பொருட் செல்வம் நிரம்ப உள்ளவர்களாய் உலகிலே எளியவர்களைப் பயமுறுத்தி ஜெகத்தில் தாம்மட்டுமே பிழைக்க எண்ணுகின்ற முட்டாள்களின் மனதைக் கலக்கி வெட்டிப் பிளந்து அவர்களை நெருக்கும் அதி சூரனே, நச்சை உடைய (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் உறங்கும் கருணா மூர்த்தியான திருமால், யானை (கஜேந்திரன்) கூச்சலிட்டதை காதில் நன்கு ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக கருடன் மேல் சிறக்க அன்புடன் வந்த ஒப்பற்ற திருமால் விரும்பும் மருகனே, மாமரமாக கடலில் வந்த சூரனை நெறுநெறு என்று வெட்டிய வலிமையான வேலாயுதம் என்ற ஒப்பற்ற படையை உடையவனே, சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம்* என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே.
* திருச்சத்திமுத்தம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 875 - திருச்சத்திமுத்தம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத்த, தனதனன, உடைய, தத்ததன, வந்த, ஒப்பற்ற, உள்ள, திருமால், அன்புடன், பெருமாளே, போன்றதும், விளங்கும், கண்களை, காதில்