பாடல் 861 - திருவிடைமருதூர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனதனதன தான தானன தனதனதன தான தானன தனதனதன தான தானன ...... தந்ததான |
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன் மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின் விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய் எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச் செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே. |
புனுகு சட்டத்தோடு பன்னீர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளிலும் நிரம்பியதாய் அள்ளி, மார்பில் சந்தனம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசி, புளகாங்கிதம் கொண்ட அழகுள்ளதாய், அலங்காரம் பூண்டதாய் உள்ள மலை போன்ற மார்பகங்களை, பொதுவான இடத்தில் நின்று விலை கூறும் வேசிகளின் ரத்தினம் பதித்த குண்டலங்களின் மீது போர் செய்கின்ற அம்புகள் போன்ற கண்கள் ஏற்படுத்தும் கொடுமையாலே, மெழுகு போல உள்ளம் உருகி அந்த வேசியர்களுடைய உள்ளத்தே தோன்றும் சச்சரவால் மன மயக்கம் கொண்டவனாய் பலவிதமான பரிதாபம் படத் தக்க துன்பம் அடைந்து அடியேன் நெருங்கி வரும் (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் மாயை வசத்தால் மிகவும் மனக் கலக்கம் கொண்ட என் அறிவு தொலைந்து அழிய, சுவாமியே, உன்னுடைய கொடையாக சிவஞான உபதேசத்தை நீ எழுந்தருளி வந்து தந்து உதவுக. (சூரனுடைய) ஏழு மலைகளும் நிலை பெயர்ந்து ஓடவும், கடல் மொகுமொகு என்று கலங்கி அலைகள் வீசவும், மண்ணுலகத்தாரின் துன்பங்கள் கெடவும், அசுரர்களின் சேனைகள் தோற்று ஓடவும், தேவர்கள் சிறையினின்று விடுபடவும், நாய், நரி, கழுகுகள், பறவைகளின் அரசனாகிய கருடன் மேலே வட்டமிடவும், போர்க்களத்தில் பூத கண சேனைகள் நின்று உலாவவும், செழுமை வாய்ந்த பிணிமுகம்* என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமான மயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே, அலைகள் ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில்** வீற்றிருக்கும் தம்பிரானே.
* முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானை வாகனமும் உண்டு.
** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 861 - திருவிடைமருதூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனதன, மாயை, சேனைகள், தானன, அலைகள், என்னும், யானை, ஓடவும், மீதும், உள்ள, மீது, தம்பிரானே, கொண்ட, நின்று, வரும்