பாடல் 855 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான |
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர் தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி னார்பு யங்கழையி னார்த னங்குவடு சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டா£கம் சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை யார்ச ரண்கமல நேரி ளம்பருவ தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்பமூடே சோக முண்டுவிளை யாடி னுங்கமல பாத மும்புயமி ராறு மிந்துளபல் தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக நீலி கண்டிகலி யாணி விந்துவொளி யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள் சேறு டன்குருதி யோட எண்டிசையும் ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில் ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே. |
தேன் என இனிக்கும் வாயிதழ் ஊறலை உடையவர். பளிங்கு போன்று வெண்ணிறமான பற்களை உடையவர். குளிர்ந்த பேச்சை உடையவர். அம்பு போன்ற கண்ணையும் அழகு சிறந்த முகத்தையும் உடையவர். இளம் பிறை போன்றது என்று சொல்லக் கூடிய நெற்றிப் புருவத்தை உடையவர். வண்டுகள் பொருந்திய கூந்தலை உடையவர். கமுகு போன்ற கழுத்தினை உடையவர். மூங்கில் போன்ற தோளை உடையவர். மார்பகங்கள் மலையை ஒக்க சிவந்த நிறத்தை உடையவர். துவட்சி உற்ற இடையையும், தாமரை போன்ற பெண்குறியையும் கொண்டவர். மயக்கும் மந்திர வித்தையைக் கொண்டவர்கள். வாழைத் தண்டு போன்ற தொடையை உடையவர்கள். தாமரை போன்ற பாதங்களை உடையவர். இளம் பருவத்தையுடைய மயில் போன்றவர். சந்தனம் முதலியவற்றைப் பூசிக் கொள்ளுபவர்களோடு செய்யும் சேர்க்கை இன்பத்தில் சோர்வு அடைந்து விளையாடின போதும், உனது தாமரைத் திருவடிகளையும், பன்னிரண்டு தோள்களையும், கடம்பு முதலிய பலவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்த திருமார்பையும் அன்பு நிறைந்த என் மனத்தில் தியானிப்பேன். ஓம் நமசிவாய என்னும் அந்த சிவத்துடன் கலந்த உருவத்தினள், ஐந்து திரு முகங்களைக் கொண்ட நீலி, ரத்தின மாலை அணிந்துள்ள கல்யாணி, சிவ ஞான சக்தி, ஒளி ஓசை இவைகளுக்கு ஆதாரமாயுள்ள அழகுற்ற அம்பிகை என்ற உமாதேவி பெற்ற செவ்வேளே, பேரொலியுடன் ஆரவாரம் இட்ட அசுரர்களின் கூட்டங்களும் மங்கையர்களும் இறந்து பட, அவர்களின் உடல் சேறுடன் ரத்தமும் புரண்டு ஓட, எட்டுத் திசையிலும் இருந்து புகழும் கந்தருவர்கள் பாட, நடனம் செய்கின்ற வேலாயுதனே, தினைப் புனம் காத்த மங்கை, பரிசுத்தமான ஞான மயமான ரம்பை போன்ற அழகி, எனது தாய், சந்திரனை ஒத்த திருமுகம் உடையவள், வஞ்சிக் கொடி போன்ற குறமான் வள்ளியையும், தேவர்கள் வளர்த்த மான் ஆகிய தேவயானையையும் அணைந்து அழகு விளங்கும் திரு மார்பனே, அழகிய திருநீற்றுப் பச்சை, அறுகு, மண்டை ஓடு, கொன்றை மலர், நிலா, கங்கை ஆகியவற்றை அணிந்த சடையை உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும், அழகுள்ளதும், அழியாததும் ஆகிய திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே.
* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 855 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர், தந்ததன, அணிந்த, திரு, விளங்கும், ஆகிய, தாமரை, அழகு, யார்ச, நீலி, தம்பிரானே, இளம்