பாடல் 846 - திருத்துருத்தி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத் தனத்தன தானன தானன தனத் தனத்தன தானன தானன தனத் தனத்தன தானன தானன ...... தனதான |
மலைக் கனத்தென மார்பினி லேயிரு முலைக் கனத்துற வேயிடை நூலென வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத மயிற் குலத்தவ ராமென நீள்கலை நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி விலைக் கெனத்தன மாயிர மாயிர முலைக் களப்பினு மாசைபொ தாதென வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய் வெடுக் கெடுத்தும காபிணி மேலிட முடக் கிவெட்கும தாமத வீணனை மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே அலைக் கடுத்தசு ரார்பதி கோவென விடப் பணச்சிர மாயிர சேடனும் அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா அடைக் கலப்பொரு ளாமென நாயெனை அழைத் துமுத்திய தாமநு பூதியெ னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு வுளத் திலற்பமெ னாநினை தேசிகர் சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா திருக் கடப்பலர் சூடிய வார்குழல் குறத் திகற்புட னேவிளை யாடியொர் திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. |
மலைப்பாரம் போல நெஞ்சில் இரண்டு மார்பகங்களும் சுமையைத் தருவதால் இடுப்பு நூல் போல் வளைவு பெற, கரிய நிறம் உள்ள கூந்தல் தோள்கள் மேல் அலை வீசுவது போல் புரள, மயில்களின் கூட்டத்தவர்கள் போல் நீண்ட ஆடைகளை வேண்டுமென்றே தளர்த்தி வைத்து, இரண்டு நீண்ட கண்ணாகிய வேல் கொண்டு மயக்குவித்து தம்மை விரும்பி வந்தவர் மேல் உள்ள குற்றங்களைக் கூறுவது போன்று அந்தக் விழிகளைச் செலுத்தி, கொடுக்க வேண்டிய பொருளுக்காக பொன் பல ஆயிரங்கள் அந்த மார்பகங்களுக்காக அளந்து கொடுத்தாலும் பேராசை காரணமாக போதாது என்று வெறுப்பைக் காட்டுபவர்களும், வஞ்சகச் செயலினரும் ஆகிய விலைமாதர்கள் மீது காம மயக்கம் மேலோங்கிப் பின் திடீரென்று கொடிய நோய்கள் பீடிக்க ஒடுங்கி வெட்கப்படுகின்ற, பெருத்த மதம் பிடித்த வீணனாகிய நான் மின்னல் போன்று ஒளி வீசுகின்ற உனது திருவடிகளில் பொருந்திச் சேர அருள் புரிவாயாக. கடலில் போய்ப் புகுந்த அசுரர் தலைவனாகிய சூரன் கோ என்று அஞ்சி அலற, விஷம் கொண்ட படம் உடைய தலைகள் ஆயிரங்கள் உடைய ஆதி சேஷனும் அதிர்ச்சி அடைய, ஒளிவீசும் வேலைச் செலுத்திய வலிமையாளனே, மயில் வீரனே, அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளை ரட்சிப்பது போல அடியேனை பொருட்படுத்தி அழைத்து, முக்தியைத் தரவல்ல திருவருள் பிரசாதமாகிய திருப்புகழை நீ ஓதுவாயாக என்று திருவாய் மலர்ந்து வேலையும் மயிலையும் பாதுகாப்பாக (என் உடலில் இலச்சினையாகப் பொறித்து) அருளியவனே, மேரு மலையாகிய வில்லைக் கையில் பிடித்தபடி இருக்க முப்புரங்களை தீயினால் பொடியாகும்படி அழிய திருவுள்ளத்தில் சிறிதளவே நினைத்த தேசிகராகிய சிவபெருமான் பெருமை அடைய முத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற கருத்துக்கு உரியதான (தேவாரப்) பாக்களை (திருஞான சம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே, அழகிய கடப்ப மலர் சூடிய நீண்ட கூந்தலை உடைய குறத்தியான வள்ளியின் கற்புக் குணங்களில் திளைத்து விளையாடி, ஒப்பற்ற திருத்துருத்தியில்* வாழும் முருகப் பெருமானே, தேவர்களின் பெருமாளே.
* திருத்துருத்திக்கு குற்றாலம் என்று பெயர். கும்பகோணத்துக்கு வடக்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 846 - திருத்துருத்தி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, நீண்ட, உடைய, தனத், போல், தனத்தன, மாயிர, போன்று, ஆயிரங்கள், ஒப்பற்ற, கொண்டு, அடைய, முலைக், பெருமாளே, இரண்டு, உள்ள, மேல், சூடிய