பாடல் 833 - எட்டிகுடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த ...... தனதானா |
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த கயலொத்த மலரொத்த ...... விழிமானார் கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச் சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தருசக்ர தரனுக்கு ...... மருகோனே திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே. |
கடல், விஷம், அம்பு, மான், கயல் மீன், தாமரை மலர் ஆகியவற்றை ஒத்ததாகிய கண்களை உடைய விலைமாதர்களின் பொன் சிமிழ், தாமரையின் மொட்டு, மலை ஆகியவைகளுக்குச் சமம் என்று சொல்லப்படுவதும், ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான மார்பகம் மனத்தில் அழுந்திப் பதிய, அந்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி, செல்வம் இழந்து வறுமை அடைந்து சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து மெலிவு அடைந்த தனியனாகிய எனக்கு உன்னுடைய இரண்டு திருவடிக் கமலங்களை மிக அன்புடன் அருள்வதற்கு வருவாயாக. தடையில்லாத அம்பைச் செலுத்தி, மணி, வைரம் இவை பதிக்கப்பட்ட கி¡£டத்தைக் கொண்ட பத்து தலைகளை உடைய துஷ்டனாகிய ராவணனுடைய உயிரைப் போகச் செய்து, தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதையை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து வெற்றியைக் கொண்டவனும் (ஆகிய ராமனான) சக்ராயுதம் ஏந்திய திருமாலுக்கு மருகனே, மெய்ம்மை வாய்ந்த தில்லைக் கனக சபையில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் மீதுள்ள) நட்பின் காரணமாக நடனம் செய்த சிவபெருமானுக்கு கண் போன்ற இனிய மகனே, செழிப்புள்ள சங்கு ஈன்ற முத்துக்கள் வயலில் நிறைந்து விளங்கும் எட்டிகுடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 833 - எட்டிகுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதத்த, வீற்றிருக்கும், வாய்ந்த, உடைய, பெருமாளே, கொண்ட