பாடல் 826 - சிக்கல் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தன்ன தத்த தனத்த தானன தன்ன தத்த தனத்த தானன தன்ன தத்த தனத்த தானன ...... தனதான |
கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர் வன்ம னத்தை யுருக்கு லீலையர் கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக் கையி லுற்ற பொருட்கள் யாவையும் வையெ னக்கை விரிக்கும் வீணியர் கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப் பின்னி விட்ட சடைக்கு ளேமலர் தன்னை வைத்து முடிப்பை நீயவி ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற் பெய்யு முத்தமி ழிற்ற யாபர என்ன முத்தர் துதிக்க வேமகிழ் பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய் வன்னி யொத்த படைக்க லாதிய துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி மண்ணி லற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே மன்னு பைப்பணி யுற்ற நீள்விட மென்ன விட்டு முடுக்கு சூரனை மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச் சென்னி பற்றி யறுத்த கூரிய மின்னி ழைத்த திறத்த வேலவ செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா செம்ம னத்தர் மிகுத்த மாதவர் நன்மை பெற்ற வுளத்தி லேமலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே. |
கற்கண்டினைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசும் பொது மகளிர். கடினமான மனத்தையும் உருக்க வல்ல லீலைகளைச் செய்பவர்கள். கண்களைக் கொண்டு மயக்கும் விழிக்கின்ற பார்வையர். இனிய வழியில் பக்குவமாக கையில் உள்ள எல்லா பொருட்களையும் வைத்திடு என்று கூறி கையை விரித்து நீட்டுகின்ற பயனற்றவர்கள். (வருவோர்) கைகளைப் பிடித்து இழுத்து மார்பகங்களின் மீது விழும்படியும், பின்னி வைத்துள்ள கூந்தலிலே மலர்களை வைத்து பண முடிப்பை நீ அவிழ்ப்பாயாக என்று கூறுகின்ற அற்ப குணம் படைத்தவர்கள். இத்தகைய வேசியர்களின் ஆசையில் நான் அலைச்சல் உறாமல், சொல்லப்படும் இயல், இசை, நாடகம் என்று மூவகைப்பட்ட தமிழில் ஆசை கொண்டவனே என்று முக்தி நிலை அடைந்த பெரியோர்கள் போற்றி செய்ய மகிழ்கின்றவனே, சிவ பெருமானுக்கு உபதேசம் செய்த நாயகனே, அருள் தருவாயாக. அக்கினிக்கு ஒப்பான படைக்கலங்கள் முதலியன பொருந்தும் கைகளை உடைய அரக்கர்களின் பெரிய தலைகள் பூமியில் அற்று விழும்படி, வீரம் விளைவிக்கின்ற திருமாலின் மருகனே, பொருந்திய படத்தை உடைய பாம்பின் நச்சுப்பையில் உள்ள கொடிய விஷம் என்று சொல்லும்படி வேலினைச் செலுத்தி போரிட விரைவாக எதிர்வந்த சூரனை, (அவனது) மற் போர் செய்யும் கரடு முரடான மார்பு பிளக்கத் தக்க வகையில் அவனது தலையைப் பற்றி அறுத்த கூர்மை வாய்ந்த, மின் போல் ஒளிரும் ஆற்றல் படைத்த வேலாயுதத்தை உடையவனே, செம்மை வாய்ந்த அழகிய தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் இருந்த மான் போன்ற வள்ளி நாயகியை அணைந்த அழகிய மார்பனே, செம்மை வாய்ந்த மனம் உடைய பெரியோர்கள், பெருந்தவம் மிக்கவர் ஆகியவர்களின் நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தில் விளங்கி நிற்கும் செல்வனே, சிக்கல் நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. * சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 826 - சிக்கல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சிக்கல், உள்ள, உடைய, வாய்ந்த, பற்றி, தன்ன, தத்த, தனத்த, தானன, பெரியோர்கள், அழகிய, வள்ளி, செம்மை, அவனது, செய்ய, பின்னி, பார்வையர், வைத்து, முடிப்பை, பெருமாளே, சூரனை, போல்