பாடல் 824 - சோமநாதன்மடம் - திருப்புகழ்

ராகம் - செஞ்சுருட்டி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதனன தான தான தனதனன தான தான தனதனன தான தான ...... தனதான |
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு முழலுமநு ராக மோக ...... அநுபோகம் உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக் கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர மெனமொழியும் வீசு பாச ...... கனகோப எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன் அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன் அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும் முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ முகரசல ராசி வேக ...... முனிவோனே மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே. |
ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல், தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு, என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் ¨தரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான ஞானோபதேசம் என்ற வாளை எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக. தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும், சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும், அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும், இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே, போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும், வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும், சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே, உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும், அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே.
* திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 824 - சோமநாதன்மடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, கொண்ட, பெருமாளே, செய்த, புத்தூரில், வந்தார், தேவர், சேனை, பரமசிவ, டாது, வாளை, சோமநாதன், தகதிமி, மேரு