பாடல் 813 - திருச்செங்காட்டங்குடி - திருப்புகழ்

ராகம்
- ஸிந்துபைரவி
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை - 35
நடை - தகதகிட
எடுப்பு - /4/4/4 0
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை - 35
நடை - தகதகிட
எடுப்பு - /4/4/4 0
தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன தந்தான தானதன தானதன தானதன ...... தனதான |
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர் சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல் சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற் சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள் வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே சிங்கார ரூபமயில் வாகனந மோநமென கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென கங்காள வேணிகுரு வானவந மோநமென திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே. |
மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய, மலர்க் கொத்துக்கள் நிறைந்த மாலை அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய, வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச, உதடுகள் குமுத மலர் போல் விளங்க, மேகத்தில் தோன்றும் வானவில் போன்ற நெற்றி, வாளையும் வேலையும் போன்ற கண்கள், இவற்றுடன் கொஞ்சுதல் மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி, நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்றெல்லாம் ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மாதர்கள், கூடிக் களிப்பவர்கள், சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள், திரிகின்றவர்கள், அலங்காரத் தோளினர், பண ஆசையுள்ளவர்கள், சாதிபேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர், இழிகுலத்தவர், சீ, சீ, இத்தகையோரது மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல், யோகவழியில் கிடைக்கும் தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து, மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக, மூலாக்கினி வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான திருவருளைத் தந்தருள்க. அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்று கந்தனே, குமரனே, குருநாதனே, போற்றி, போற்றி, என்று குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி, என்று வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம் கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி, என்று எலும்பு மாலைகளை அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவனே போற்றி, போற்றி, என்று முழங்கவும், வலிமை மிக்க சூரன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி கூரிய வேலைச் செலுத்திய முருகனே. இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியும், ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச் சென்று அந்த வள்ளிநாயகியின் இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே, எட்டுத் தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப்புகுந்த** திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும் மயில் மீது அழகோடு அமர்ந்து, எனது ஆசையால் எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே, தேவர்களின் பெருமாளே.
* சங்கோதை நாதம் - யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு:கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்).
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம் ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும், குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது - பெரிய புராணம்.
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 813 - திருச்செங்காட்டங்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, தானதன, மோநமென, மிக்க, சிவபிரான், தந்தான, போல், மயில், புராணம், காதில், நிறைந்த, சங்கோதை, சிங்கார, பெருமாளே, அசைய, தாளம், அணிந்த