பாடல் 81 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ரஞ்சனி;
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் ...... தனதான |
புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் ...... பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும் திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத் திகிரிச் செங்கைத் ...... திருமாலும் திரியப் பொங்கித் திரையற் றுண்டுட் டெளிதற் கொன்றைத் ...... தரவேணும் தகரத் தந்தச் சிகரத் தொன்றித் தடநற் கஞ்சத் ...... துறைவோனே தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் தையளித் தன்புற் ...... றருள்வோனே பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப் படியிற் சிந்தத் ...... தொடும்வேலா பவளத் துங்கப் புரிசைச் செந்திற் பதியிற் கந்தப் ...... பெருமாளே. |
புள்ளிகளை உடையதும் தூய்மையானதும் அழகியதுமான மலையை ஒத்த ஐராவத யானையின் மேலும் மேகத்தின் மேலும் தங்கிப் பொலிகின்ற தேவேந்திரனும், இணையற்றதும், எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமானதும் ஆகிய வேதத் தொகுப்புகளின் பொருளை முறையாக மொழிபவராகிய பிரமதேவனும், மலை போன்றதும், செம்மைப் பண்புடையதுமான ஆதிசேஷன் மீது துயின்ற அந்தச் செங்கையில் சக்ராயுதத்தை ஏந்திய நாராயணமூர்த்தியும், தமக்கு இந்த உபதேசம் கிடைக்கவில்லையே என்று இங்கும் அங்கும் திரிந்திடவும், உவகை பொங்கி, உள்ளத்தில் எண்ண அலைகள் நீங்கி, சிவானுபவத்தை உட்கொண்டு, என் உள்ளம் தெளியுமாறு ஒரு மொழியை உபதேசித்து அருள வேண்டும். தகராகாசமாக இருந்து* அழகிய வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி, அகன்ற நல்லிடமான இதயக் கமலத்தில் வீற்றிருப்பவனே, இளமையான மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே, ஒளியுடைய பசும்பொற் சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை இந்தப் பூமியின் கண் பொடியாகுமாறு தொடுத்தருளிய வேலாயுதனே, பவளம் போன்று சிவந்த தூய மதில்கள் சூழ்ந்த திருச்செந்தூர்த் தலத்தில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.
* ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும் ஆகாயம் 'தகராகாசம்' எனப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 81 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், தந்தத், மேலும், பெருமாளே, திகிரிச், கந்தப்