பாடல் 800 - தான் தோன்றி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன ...... தனதான |
சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர் தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல் வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய் வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு ...... மடிபேண மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித் தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே. |
சூழ்ந்து நிகழும் துன்பம் தரும் வினைகள் ஒன்று கூடி நிலை பெறுவதற்கு இடமானதும், நீரால் வளருவதுமான தூணை ஒத்த இந்த உடலும் உலகிடையே தளர்ச்சி உற்று, கட்டு குலைந்து, நெருப்பில் நுண்ணிய சாம்பற் பொடியாகிவிடும் குற்றம் வாய்ந்த தன்மையை மனத்தினுள் நன்கு ஆய்ந்து உணராமல், விரும்பி விரைவுடன் சென்று நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து நிரம்பப் பொருள் தேடவேண்டி, பொற் கலப்பையைக் கொண்டு வயலை உழுபவர்கள் போல, மனம் வேகும் தன்மையும் ஒழிந்து, வினை பெருகும் நிலைமையும் நீங்கி, (நற்கதி) விளையும்படியான தகைமையில், உனது நல்ல திருவடிகளைத் தொழ ஆண்டருள்க. வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப் பெற்று, ஆய்ந்த ஒழுக்கத்தில் உள்ள நல்ல தவசிகளும், விண்ணுலகத்தில் வாழும் பிறரும் உன் திருவடியைப் போற்ற, பொன் வளையல்களை அணிந்த மாதர்கள் (வள்ளி, தேவயானை) தாம் இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் தோன்ற, ஆகாயத்தை அளாவும்படி மயிலின் மீது ஏறி, கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் விழுந்து நெருங்கியிருந்த (எழு) கிரியில் வாழ்ந்த அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலனே. தான் தோன்றி* அப்பர் என்னும் திருநாமத்தை உடைய சிவபெருமான் (தேவியுடன்) குடி கொண்டிருந்து பெற்ற நல்ல குமரனே, தானே தோன்றி (சுயம்பு மூர்த்தியாய்) நிற்க வல்ல பெருமாளே.
* தான்தோன்றி இப்போது 'ஆக்கூர்' என வழங்கப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 800 - தான் தோன்றி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நல்ல, தாந்தாந்த, தான்தோன்றி, தத்ததன, ஆய்ந்து, பெருமாளே