பாடல் 753 - வேப்பூர் - திருப்புகழ்

ராகம் - பீம்பளாஸ்
தாளம் - அங்கதாளம் - 15 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 15 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனதன தனதன தனதன தாந்த தாத்தான தந்த ...... தனதான |
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக் குகையிட மருவிய கருவிழி மாந்தர் கோட்டாலை யின்றி ...... யவிரோதம் வரஇரு வினையற உணர்வொடு தூங்கு வார்க்கே விளங்கு ...... மநுபூதி வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும் திரள்வரை பகமிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய இந்த்ர ...... புரிவாழ விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு வேற்கார கந்த ...... புவியேழும் மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த வேப்பூர மர்ந்த ...... பெருமாளே. |
ஆரவாரம் செய்கின்ற கடல் சூழ்ந்த உலகில் உயிர் எடுத்து வந்து, பலவித விளையாட்டுகளை ஆடும் இந்த உடலை விரும்பிப் போற்றி, மலைக்குகை போன்ற கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும் துன்பங்கள் எவையும் இல்லாமல், விரோதமின்மை என்னும் மனப்பான்மை வருவதற்கும், நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் நீங்குவதற்கும், ஞான உணர்வோடு இருப்பவர்களுக்கே விளங்கும்படியான அனுபவ ஞானமான உன் அருட்பிரசாத வடிவத்தினை உன் அழகிய லக்ஷ்மிகரம் நிறைந்த திருவாக்கால் உபதேசித்து அருளவேண்டும். திரண்டு பருத்த கிரெளஞ்சமலையானது பிளவுபடவும், குருகுலவேந்தன் அர்ச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த கண்ணன் (திருமாலின்) மைந்தனாகிய பிரமன் தான் கற்ற வேதமும் தானுமாகக் கலக்கம் அடையவும், அசுரர்களின் மனைவியர் ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும், தேவேந்திரனின் தலைநகரம் அமராவதி வாழ்வுபெறவும், பரந்து விரிந்த அலைகடலில் நெருப்புப் பற்றி எழவும், முதன்மையாம் தன்மை படைத்த வேலாயுதத்தைச் செலுத்திய கந்தனே, ஏழுலகின் வறுமையும் நீங்குமாறு செழிப்பான விளைச்சலைத் தரும் வளமான வயல்கள் சூழ்ந்த வேப்பூரில்* அமர்ந்த பெருமாளே.
* வேப்பூர் வட ஆற்காடு மாவட்டத்தில் ஆற்காட்டுக்கு அருகில் பாலாற்றின் கரையில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 753 - வேப்பூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகதிமி, சூழ்ந்த, தனதன, பெருமாளே, மனைவியர்