பாடல் 736 - தேவனூர் - திருப்புகழ்

ராகம் - மாண்ட்
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தானன தனனா தனதன தான தானன தனனா தனதன தான தானன தனனா தனதன ...... தந்ததான |
காணொ ணாதது உருவோ டருவது பேசொ ணாதது உரையே தருவது காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக் காய பாசம தனிலே யுறைவது மாய மாயுட லறியா வகையது காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப் பேணொ ணாதது வெளியே யொளியது மாய னாரய னறியா வகையது பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப் பேரு மாய்கலை யறிவாய் துரியவ தீத மானது வினையேன் முடிதவ பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே வீணொ ணாதென அமையா தசுரரை நூறி யேயுயிர் நமனீ கொளுவென வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே வேத நான்முக மறையோ னொடும்விளை யாடி யேகுடு மியிலே கரமொடு வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ் ஞான யோகிக ளுளமே யுறைதரு தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே. |
கண்களால் காண்பதற்கு முடியாததும், உருவமும் அருவமுமாக இருப்பதும், பேசுதற்கு முடியாததும், பலவித விளக்கங்களுக்கும் இடம் தருவதும், காணப்படும் நான்கு வேதங்களுக்கும் முடிவான பொருளாய் நிறைந்து நிற்பதும், ஐம்பூதங்களினால் ஆன இந்த உடம்பின் மேல் உள்ள பாசத்தில் நிலைத்து நிற்பதும், மாயப் பொருளாக இப்பெரும் உடலால் அறியமுடியாத வகையில் இருப்பதும், சா£ரத்தை உடைய மனிதர்கள் எதிரே அவர்களைப் போலவே மனித உருக்கொண்டு வந்து பேசினாலும், இன்னாரென அறிந்து போற்ற முடியாததும், ஆகாய வெளியிலே ஒளிப்பிழம்பாகத் திகழ்வதும், திருமால், பிரம்மா இவர்களால் அறியமுடியாத வகையில் இருப்பதும், வேற்றுமை, ஒற்றுமை என்ற தன்மைகளோடு உலக ¡£தியாக வளர்வதும், பீடம், லிங்கம் (சக்தி - சிவம்) என்ற பேருடையதாயும், நூல்களின் சாரமாகவும், யோகியரின் உயர் நிலைக்கும் அப்பாற்பட்டதும், நல்வினையால் என் முடிந்த தவத்தின் பெரும்பயனானதும், திருவருள் நிறைவாக விளங்குகின்றதும், இந்த அத்தனையும் பொருந்தி விளங்குபவன் நீ ஒருவன்தான். வீணான காரியம் கூடாதென விலக்கி அடங்காத அசுரரை பொடியாக்கி, அவர்கள் உயிரை யமனிடம் நீ கொள்வாயாக என்று வேலினைப் பாய்ச்சிய திருக்கரத்தனே, பார்வதியின் ஞானப்பால் அருந்திய அரசனே, வேதம் கற்ற நான்முக அந்தணன் பிரமனுடன் விளையாடி அவன் குடுமியிலே கையால் பலமாகக் குட்டிய வீரனே, குறவர் வாழும் வள்ளிமலையில், மிக்க உயரத்தில் கட்டப்பட்ட பரண் மீது இருந்த பெண் வள்ளியிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து, அவளை அணைக்க விரும்பிய திருடனே, திருவருள் பாலிக்கும் கந்தக் கடவுளே, எவரும் தம்மிடம் நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் மெய்ஞ்ஞான யோகிகளின் உள்ளத்தில் விளங்கி வீற்றிருப்பவனே, தேவனூரில் எழுந்தருளியுள்ள குமரனே, தேவர்களின் தம்பிரானே.
* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 736 - தேவனூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இருப்பதும், முடியாததும், ணாதது, தனதன, தனனா, தகதிமி, தானன, அறியமுடியாத, திருவருள், உள்ள, வெளியிலே, வகையில், தம்பிரானே, வகையது, வெளியே, நான்முக, நிற்பதும்