பாடல் 722 - திருவக்கரை - திருப்புகழ்

ராகம் -
குந்தலவராளி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன ...... தனதானா |
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ தொழிவ துனைச்சிறி ...... துரையாதே கருவழிதத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை ...... யிடைவீழா உலகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி ...... யடிநாயேன் உனதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத ...... மருள்வாயே குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா குணதர வித்தக குமர புனத்திடை குறமக ளைப்புணர் ...... மணிமார்பா அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு மணிதிரு வக்கரை ...... யுறைவோனே அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன அவைதரு வித்தருள் ...... பெருமாளே. |
கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன் சில நூல்களை ஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும். உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல், கருக்குழியில் வேகமாகச் செலுத்தும் பள்ளத்தில் புகுந்து பொல்லாத நரகத்தின் மத்தியில் விழுந்து விடாமல், இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து மிகவும் திரிதலை விட்டு, இனியாவது கீழான நாய் போன்ற அடியேனும் உன் அடியார் கூட்டத்தின் உள்வட்டத்தில் ஒருவனாகும்படியாக உன்னிரு மலர்ப் பாதங்களை அருள்வாயாக. கிரெளஞ்சமலைக் கூட்டங்கள் பொடியாகும்படி, அலைவீசும் கடல் நீரின்றி வற்றிப் போகும்படி, அசுரனாம் சூரனோடு போர் செய்த வேல் வீரனே, நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே, குமரனே, தினைப்புனத்தின் இடையே குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே, அலை வீசும் நீரிலே தவழ்கின்ற சங்குகள் பிரகாசிக்கின்ற அழகிய திருவக்கரைத்* தலத்தில் வீற்றிருப்பவனே, உன் அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ அன்ன ஆசைகளை வரவழைத்து நிறைவேற்றி அருளும் பெருமாளே.
* திருவக்கரை தென்னாற்காடு மாவட்டத்தில் மயிலம் ரயில் நிலையத்திலிருந்து 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 722 - திருவக்கரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தத்தன, அழகிய, பெருமாளே